கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
பழனியில் பதுங்கியிருந்த பிரபல கொள்ளையர்கள் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 4 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது.

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாகப் பழனியில் பதுங்கியிருந்த பிரபல கொள்ளையர்கள் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 4 பவுன் நகை மீட்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரெட்டியார் குளம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சாரதி (50). இவர் கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி, தனது வீட்டில் இருந்து வழக்கம்போல் அருகில் உள்ள கடைக்குச் பொருட்கள் வாங்குவதற்காகச் சென்று கொண்டிருந்தார். அவர் கரும்பாயிரம் பிள்ளையார் கோவில் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் திடீரென சாரதியை மறித்து, அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியை மின்னல் வேகத்தில் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சாரதி, அலறிச் சத்தமிட்டும் அதற்குள் அந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் பறந்துவிட்டனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சாரதி உடனடியாக கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், குற்றவாளிகளைச் விரைவாகப் பிடிக்க மாவட்ட காவல் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவிட்டார்.
அதன்பேரில், துணை காவல் சூப்பிரண்டு சர்மு அவர்களின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் இளையராஜா ஆத்மநாதன் தலைமையில் உதவி ஆய்வாளர் முனியரசு, சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ்குமார், தலைமை காவலர் காமராஜ், முதல் நிலை காவலர் அறிவழகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளைக் கண்டறிய போலீசார், கும்பகோணம் நகரம் மற்றும் சம்பவம் நடந்த கரும்பாயிரம் பிள்ளையார் கோவில் பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். கேமரா பதிவுகளின் அடிப்படையில் மோட்டார் சைக்கிளின் அடையாளம் மற்றும் குற்றவாளிகளின் உருவ அமைப்புகளைக் கண்டறிந்த போலீசார், தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் ஒளிந்திருப்பதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் பேரில் உடனடியாக பழனிக்குச் சென்ற போலீசார், அங்குள்ள ஒரு ரகசிய இடத்தில் பதுங்கியிருந்த பழனி தாலுகா மருதகோலம் பகுதியைச் சேர்ந்த போலாஹுசைன் மகன் முகமது பிடா (25), தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த முகமது யூசப் மகன் முகமது இப்ராஹிம் (24) ஆகிய இருவரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், கும்பகோணத்தில் பெண்ணிடம் சங்கிலி பறித்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 4 பவுன் தங்க நகையை மீ்ட்டனர்.
போலீசாரின் மேலும் தொடர் விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. தற்போது பிடிபட்ட முகமது பிடா, முகமது இப்ராஹிம் மற்றும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபர் ஆகியோர் மீது தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களிலும் உள்ள பல காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் தொழில்முறை குற்றவாளிகள் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய 3-வது நபரைப் போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். சாதுரியமாகச் செயல்பட்டு குற்றவாளிகளை விரைவாகக் கைது செய்த காவல் குழுவினரை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















