கும்பகோணத்தில் சாலையில் பாய் விரித்து படுக்கும் நூதன போராட்டம் - அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை
’’தங்குவதற்கு போதுமான இடவசதிகள் கூட இல்லாததால், மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தும் வகையில் பாயை விரித்து சாலையில் போட்டு நுாதன முறையில் போராட்டம்’’
கும்பகோணம் பெரும்பாண்டி பகுதியில் உள்ள ஆட்டோ நகரில் சேதமடைந்துள்ள சாலைகளை சீர் செய்யவும், சாலையில் வழிந்தோடும் சாக்கடை கழிவுநீரை அப்புறப்படுத்திடவும் வலியுறுத்தி அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீர் பாயை விரித்து படுத்து நுாதன முறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் பெரும்பாண்டி பகுதியில் உள்ள ஆட்டோ நகரில் மிகவும் நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள 5 தெருக்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய்களை பதிப்பதற்காக நகராட்சி நிர்வாகம் சிமெண்ட் சாலைகள் மற்றும் சாக்கடைகளை பெயர்த்து எடுத்து புதிதாக குழாய்களை பதிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியின் போது ஆட்டோ நகரில் உள்ள 5 தெருக்களிலும் இருந்த சாலைகளும் கழிவுநீர் சாக்கடைகளும் முற்றிலுமாக சேதப்படுத்தப்பட்டன. இந்த பணிகள் முடிவடைந்த பல மாதங்கள் ஆன நிலையில் இந்த பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் கழிவு நீர் சாக்கடைகளை முழுமையாக சீரமைக்காததால், கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக சாக்கடைகள் நிரம்பி கழிவு நீர் மற்றும் மழைநீர் தெருக்களில் வழிந்தோடுகிறது.
மேலும் இந்த பகுதியில் தேங்கி நிற்கும் அசுத்தமான கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, இந்த பகுதியில் வசிக்கும் பலர் டெங்கு மலேரியா காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம்காட்டி வருகின்றனர். இந்நிலையில் சாலை மற்றும் கழிவுநீர் சாக்கடைகளை சீரமைக்க வலியுறுத்தியும் இந்த பகுதியில் புதியதாக கழிப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தியும், கும்பகோணம் - சென்னை சாலையில் ஆட்டோ நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்குவதற்கு போதுமான இடவசதிகள் கூட இல்லாததால், மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தும் வகையில் பாயை விரித்து சாலையில் போட்டு நுாதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கும்பகோணம் சென்னை சாலையில் ஒரு அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், போலீசார், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ஆட்டோ நகர் பகுதியில் நகராட்சி சார்பில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்காக நடைபெற்ற போது, கழிவு நீர் சாக்கடைகளை சேதப்படத்தின. இதனால் தொடர்ந்து பெய்து வரும் மழையினால், மழை நீர் வடியாமல் தேங்கியது. வீடுகளுக்குள்ளும், கழிவறைகளிலும் நீர் நிரம்பியதால், சொந்த வீட்டிலேயே தங்க முடியாத நிலை ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளாததால், அவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில், கும்பகோணம்-சென்னை சாலையின் நடுவில் கோரைப்பாயை தரையில் விரித்து படுத்து, நுாதன போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்கள் பகுதியில் உடனடியாக சீர் செய்யாவிட்டால், போராட்டத்தை தொடர்ந்து செய்வோம் என்றனர்.