தலைக்கவசமும் கிடைத்தது... வாழைத்தாரும் வந்தது: தஞ்சையில் நடந்த நூதன விழிப்புணர்வு
சிறப்பு விருந்தினர் மாவட்ட எஸ்.பி., ஆர். ராஜாராம் தலைக்கவசத்தை வழங்கினார். மேலும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலை கவசமும், அணிந்து வந்தவர்களுக்கு ஒரு தார் வாழைப்பழமும் வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தஞ்சாவூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நகர போக்குவரத்து காவல் பிரிவு மற்றும் அனு மருத்துவமனை ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. நிகழ்ச்சிக்கு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். அனு மருத்துவமனை முதன்மை இருதய மருத்துவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.வி.சிவகுமார் முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து அனு மருத்துவமனை எதிரில் போக்குவரத்து பிரிவு போலீசார் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களை வரிசைப்படுத்தி நிறுத்தினர். பின்னர் அவர்களுக்கு சிறப்பு விருந்தினர் மாவட்ட எஸ்.பி., ஆர். ராஜாராம் தலைக்கவசத்தை வழங்கினார். மேலும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் தலைக்கவசம் அணிந்து அணிந்து வந்தவர்களுக்கு திருவையாறு வாழை விவசாயி மதியழகன் ஒரு தார் வாழைப்பழங்களை வழங்கினார். இதில் போக்குவரத்து காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.ஜி.ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சந்திரகுமார், பாபநாசம் பெனிபிட் ஃபண்ட் நிர்வாக இயக்குனர் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நூதன விழிப்புணர்வு குறித்து மாவட்ட எஸ் பி ராஜாராம் நிருபர்களிடம் கூறுகையில், தலைக்கவசம் அணிவது மிகவும் அவசியமான ஒன்றாகும். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அனைவரும் தலைக்கவசம் அணிந்துதான் செல்ல வேண்டும். அது உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பை அளிக்கும் ஒன்றாகும். எனவே தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டக்கூடாது. தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலைக்கவசமும், அணிந்து வந்தவர்களுக்கு திருவையாறு வாழை விவசாயி மதியழகன் சார்பில் ஒரு தார் வாழைப்பழமும் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது என்றார்.
வாழை விவசாயி மதியழகன் கூறுகையில், என் தோட்டத்தில் விளைந்த 120 தார் வாழைத்தார்களை கொண்டு வந்தோம். தலைக்கவசம் அணிவது மிகவும் அவசியமான ஒன்றாகும். குடும்பத்தினரை மனதில் கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும். இன்று நடந்த நிகழ்ச்சியில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு ஒரு தார் வாழைப்பழமும், அணியாமல் வந்தவர்களுக்கு 2 சீப் வாழைப்பழம் வழங்கினோம் என்றார்.
போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் தலைக்கவசம் அணிய வேண்டி பல்வேறு வகையிலும் நூதனமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். விபத்துக்களால் ஏற்படும் மரணங்களுக்குப் பிரதான காரணியாக அமைவது தலையில் ஏற்படும் காயங்களே.
இவை பெரும்பாலும் தலைக்கவசம் அணியாமல் செல்வதாலும், ஐஎஸ்ஐ தரமற்ற தலைக்கவசத்தை உபயோகிப்பதாலும் ஏற்படுகிறது. இத்தகைய விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு தலைக்கவசங்களை இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, வாகனத்தில் பின்புறம் அமர்ந்திருப்பவரும் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில், வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களே விபத்தின்போது அதிகளவு பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். சாலை விபத்தில் இறப்பவர்களின் குடும்பத்தினர் சந்திக்கும் வேதனைகள் அதிகம். எனவே தலைக்கவசம் அணிவதில் அலட்சியம் காட்டக்கூடாது. தலைக்கவசம் அணிவதால் சாலையில் வரும் பூச்சிகளிடமிருந்தும், காற்றில் பறக்கும் தூசிகளிடமிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ள முடியும்.
அதுமட்டுமின்றி, தலைக் கவசம் அணிவதனால் தலைப்பகுதியில் ஏற்படும் மோசமான பாதிப்புகள் பெரும்பாலும் தவிர்க்கப்படுகின்றன. விபத்து ஏற்படும்போது, தலையில் காயம் ஏற்பட்டு மூளையில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கை, கால்கள் செயலிழப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இத்தகைய நிலைமையில், அதிகபட்சமாக மூளை செயலிழந்து உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இருசக்கர வாகன ஓட்டுனர்கள் தலைக்கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும்.





















