மேலும் அறிய
ஆடுகளை கிடை அமர்த்தி இயற்கை உரமேற்றும் டெல்டா விவசாயிகள்
அறுவடை முடிந்த விளை நிலங்களில் உரமேற்ற செம்மறி ஆடுகளை ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் களமிறக்கியுள்ளனர்.
![ஆடுகளை கிடை அமர்த்தி இயற்கை உரமேற்றும் டெல்டா விவசாயிகள் Farmers hire goats horizontally and apply natural manure ஆடுகளை கிடை அமர்த்தி இயற்கை உரமேற்றும் டெல்டா விவசாயிகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/12/6092d0d46e793e1379f7915028bed1f8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
செம்மறி ஆடுகள்
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி, என 3 போகம் சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டூர் அணை குறித்த நேரத்தில் திறக்கப்படாத காரணத்தினாலும், போதிய மழை பெய்யாத காரணத்தினாலும், உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்வு காரணமாகவும், மூன்று போக சாகுபடி என்பது ஒரு போக சம்பா சாகுபடியை மட்டும், விவசாயிகள் செய்து வந்தனர். இந்நிலையில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது, அதன் காரணமாக கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் மூன்று போகம் சாகுபடி என்பது செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி இன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதன் காரணமாக மூன்று போகம் சாகுபடி செய்ய முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு வேளாண்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவிலும், நாகை மாவட்டத்தில் இவ்வாண்டு 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிலும், இதே போன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில், குறுவை சாகுபடி செய்வதற்கு அப்பகுதி விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இதற்காக திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது வயல்களை தயார்படுத்தி வருகின்றனர்.
![ஆடுகளை கிடை அமர்த்தி இயற்கை உரமேற்றும் டெல்டா விவசாயிகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/12/19c1892dfa323b72f32e7dc0a63a180c_original.jpg)
ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்தி இதுவரை திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 70,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மேட்டூர் அணையை நம்பி இருக்கும் விவசாயிகள் தண்ணீருக்காக காத்திருக்கின்றனர். குறிப்பாக அறுவடை முடிந்த விளை நிலங்களில் உரமேற்ற செம்மறி ஆடுகளை ராமநாதபுரம் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் மாவட்டங்களில் களமிறக்கியுள்ளனர். வயல்களில் களம் இறக்கப்பட்டு உள்ள செம்மறி ஆடுகள் அறுவடைக்குப்பின் வாய்க்கால் வரப்புகளில் கிடைக்கும் பச்சை புல் பூண்டுகளை மேய்ந்து ஆட்டுக் கழிவான புழுக்கைகளை வயலில் இடுகின்றன. இயற்கை உரம் மேற்றி வளம் சேர்க்க செம்மறி ஆடுகள் மேய்ச்சலுக்கு கடைமடை பகுதியில் விடப்பட்டுள்ளதால், இவ்வாண்டு இயற்கை உரம் தாராளமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் டெல்டா மாவட்ட விவசாயிகள் உள்ளனர். மேலும் ஆடுகளின் கழிவுகள் ரசாயன உரத்தைவிட உயர்வானது என்றும் இதன் வாயிலாக மண் வளம் அதிகரிக்கும் என்றும் வாய்க்கால் வரப்புகளில் படர்ந்துள்ள பச்சை புல்களை வாயாற உண்டு வயல் நெடுக கழிவுகளை இறைக்கும் ஆடுகளால் நெல் விளைச்சல் பெருகும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தனியார் உரக் கடைகளில் உரம், டிஏபி, உள்ளிட்ட இடு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், வயல்களுக்கு இயற்கை உரம் இந்த ஆண்டு அதிக அளவில் கிடைத்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரத்தில் தனியார் கடைகளில் உரங்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
வணிகம்
இந்தியா
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion