நகர்புற உள்ளாட்சி தேர்தல் - தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகளுக்கு மட்டுமே தேர்தல்
மாநகராட்சியில் 94,517 ஆண்களும், 1,04,062 பெண்களும், 18 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 1,98,597 வாக்காளர்கள் உள்ளனர்
தஞ்சாவூர் மாநகராட்சி விரிவாக்கத் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே உள்ள 51 வார்டுகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்திலுள்ள பழைமையான நகராட்சிகளில் ஒன்றான தஞ்சாவூர் நகராட்சி 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. என்றாலும், நகராட்சியாக இருந்த காலத்தில் உள்ள 51 வார்டுகளே, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டும் நீடிக்கிறது. தஞ்சாவூர் மாநகராட்சியை விரிவாக்கம் செய்யப்படுவதாகச் சட்டமன்றக்கூட்டத்தில், கடந்த 2021, ஆகஸ்ட் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதற்காக வல்லம் பேரூராட்சியையும், சுற்றியுள்ள 13 ஊராட்சிகளை முழுமையாகவும், 2 ஊராட்சிகளைப் பகுதியாகவும் இணைத்து, வார்டுகளின் எண்ணிக்கையை 69 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டது.ஆனால், தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைக்க வல்லம் பேரூராட்சி, சில ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். எனவே, விரிவாக்கத் திட்டம் நிலுவையில் இருந்து வருகிறது.தற்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே உள்ள 51 வார்டுகளுக்கு மட்டுமே தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 2 மற்றும் 7 ஆவது வார்டுகள் எஸ்.சி. பொதுப் பிரிவினருக்கும், 6, 13, 21 ஆகிய வார்டுகள் எஸ்.சி. பெண்களுக்கும் என மொத்தம் 5 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், 3, 4, 5, 14, 15, 18, 22, 26, 27, 28, 29, 33, 35, 36, 37, 38, 39, 42, 43, 44, 48, 49, 50 ஆகிய வார்டுகள் பெண்கள் பொதுப் பிரிவினருக்கும், 1, 8, 9, 10, 11, 12, 16, 17, 19, 20, 23, 24, 25, 30, 31, 32, 34, 40, 41, 45, 46, 47, 51 ஆகிய வார்டுகள் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 51 வார்டுகளில் பெண்களுக்கு 26 வார்டுகளிலும், ஆண்களுக்கு 25 வார்டுகளிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இம்மாநகராட்சியில் 94,517 ஆண்களும், 1,04,062 பெண்களும், 18 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 1,98,597 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாகத் தஞ்சாவூர் மாநகரில் உத்தேசமாக 196 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
தஞ்சாவூர் மாநகராட்சியின் தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையர் க. சரவணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக 1 முதல் 10 வரையிலான வார்டுகளுக்கு மாநகராட்சி செயற் பொறியாளர் எஸ். ஜெகதீசன், 11 முதல் 20 வரையிலான வார்டுகளுக்கு இளநிலைப் பொறியாளர் பி. பாபு, 21 முதல் 30 வரையிலான வார்டுகளுக்கு இளநிலைப் பொறியாளர் எஸ். ஆறுமுகம், 31 முதல் 40 வரையிலான வார்டுகளுக்கு உதவிப் பொறியாளர் என். ரமேஷ், 41 முதல் 51 வரையிலான வார்டுகளுக்கு உதவிச் செயற் பொறியாளர் எம். ராஜசேகரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பழங்காலத்திலிருந்தே முக்கியத்துவம் பெற்ற வல்லம் பேரூராட்சி வல்லம் பேரூராட்சி 134 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இந்தப் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், வல்லம் பேரூராட்சிக்குத் தனியாகவே தேர்தல் நடத்தப்படுகிறது. இதன் மூலம் இணைப்புத் திட்டம் இப்போதைக்கு இல்லை என்பது உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.