Writer Imayam : ’என்னை தமிழ் எழுத்தாளனாக பாருங்கள், தலித் எழுத்தாளனாக அல்ல’ ஆதங்கப்பட்ட எழுத்தாளர் இமயம்..!
என்னை சாதிய எழுத்தாளனாக பார்க்காதீர்கள் ; தமிழ் எழுத்தாளனாக பாருங்கள்’ என இமயம் சொன்னது, அவரை தலித் எழுத்தாளர் என சொல்லி, பாகுபடுத்திய அத்தனைபேரின் கன்னங்களில் விழுந்த அழுத்தமாக அறை
’செல்லாத பணம்’ என்ற தனது நாவலுக்காக 2020ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் இமயத்திற்கும், ’நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற புத்தகத்தை மலையாளத்தில் இருந்து தமிழில் மொழிப்பெயர்த்ததற்காக 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த மொழிப்பெயர்ப்புக்கான சாகித்திய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் ஜெயஸ்ரீக்கும் ‘உண்டாட்டு’ என்ற பெயரில் திருவண்ணாமலையில் பாராட்டு விழா சமீபத்தில் நடத்தப்பட்டது.
எழுத்தாளரும், கதை சொல்லியுமான பவா செல்லதுரை, எஸ்.கே.பி. கருணா ஆகியோரின் ஏற்பாட்டில் திருவிழா போல நடைபெற்ற நிகழ்வில், பிரபல எழுத்தாளரான ஜெயமோகனோடு ஜி.கே.ராமமூர்த்தி, தாமரை பாரதி உள்ளிட்டோரும் திரளான வாசர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்த விழாவில் பங்கேற்று பேசிய எழுத்தாளர் இமயம், தன் ஆதங்கங்களை விழா மேடையிலேயே கொட்டித் தீர்த்துவிட்டார்.
ஏதாவது ஒரு விதத்தில் இந்த சமூகம் தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்ற இதுபோன்ற ஒரு தருணத்திற்காகதான் ஒவ்வொரு எழுத்தாளனும் போராடிக்கொண்டிருக்கிறான் என்று உணர்வுப்பூர்வமாக தனது பேச்சைத் தொடங்கிய எழுத்தாளர் இமயம், சமீபத்தில் தனது மகன்களை விமானத்தில் அழைத்து சென்றதை குறிப்பிட்டு, இந்த உலகம் என்பது எதுவுமே இல்லை என்பது அவர்களுக்கு தெரியனும். அதனால்தான் அவர்களை ஆகாயத்தில் பறக்கும் விமானத்தில் அழைத்துச் சென்றேன் என்றார்.
இமயம் என்ற ஆள் வாழும்போதும் எழுத்தாளனாகதான் வாழ்வான், சாகும்போதும் எழுத்தாளனாகதான் சாகுவான் என பேசிய இமயம், தான் அந்திமழை பத்திரிகையில் கொடுத்த பேட்டியையும், கலைஞர் தொலைக்காட்சியில் கொடுத்த பேட்டியையும் ஒப்பிட்டு, அந்திமழையில் கொடுத்த பேட்டியை 8.9 ஆயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள், கலைஞர் டிவியில் கொடுத்த பேட்டியை 249 பேர்தான் பார்த்திருக்கிறார்கள் என சொல்லி, ’இந்த சமூகம் தன்னை ஒருபோதும் அரசியல்வாதியாக அங்கீகரிக்க மறுக்கிறது, இலக்கியவாதியாக மட்டும்தான் ஏற்றுக்கொள்கிறது என பேசி கூடியிருந்தவர்களை தன் இயல்பான பேச்சால் கரைந்துபோக செய்தார்.
பாராட்டு விழாக்கள் மீது நம்பிக்கை கிடையாது
தனக்கு பாராட்டு விழா மீது ஒருபோதும் நம்பிக்கை கிடையாது என்றும், பாராட்டு விழா என்றாலே பொய்தான் பேச வேண்டும், அது எப்போதுமே செயற்கையாகதான் இருக்கும் எனவும் பேசிய இமயம், நான் யாரென்றே தெரியாதபோது எழுதிய ’கோவேறு கழுதைகள்’ நாவலை படித்துவிட்டு, என்னை அழைத்து இந்த திருவண்ணாமலையில் பேச வைத்த ’அந்த’ பவா செல்லதுரைக்காகதான் தான் இந்த விழாவில் பங்கேற்றிருக்கிறேன் என்று பேசி அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்தார்.
இலக்கிய அரசியல் நடக்கிறது
தொடர்ந்து பேசிய அவர், இலக்கிய உலகிலும் அரசியல் நடப்பதாகவும், அது நல்லதல்ல, இலக்கிய அரசியல் பண்ணாதீங்க என கோரிக்கை விடுத்தார்.
நான் தலித் எழுத்தாளன் அல்ல தமிழ் எழுத்தாளன்
பின்னர் அவர் பேசிய பேச்சுகள்தான், கூடியிருந்தவர்கள் உள்ளங்களை முள்ளென தைத்தது. தனக்கு சாகித்திய அகடாமி விருது அறிவிக்கப்பட்டபோது, இந்து தமிழ் நாளேட்டில் வெளியான கட்டுரையை சுட்டிக் காட்டி, ’தொடர்ந்து தமிழ்நாட்டு ’தலித்’ எழுத்தாளர்களுக்கு சாகித்திய அகடாமி விருது கொடுக்கப்படுவது பாராட்டத்தக்கது’ என அந்த கட்டுரையின் முதல் வரியில் எழுதப்பட்டிருந்தது தன்னை மிகவும் பாதித்ததாக குறிப்பிட்டார்.
இலக்கியவாதிகள் உண்மையிலேயே கருணையானவர்களா ?, அன்பானவர்களா ? நாகரிகமானவர்களா ? என நா தழுதழுக்க கேட்ட இமயம், தமிழ் மொழியில் இந்த குறிப்பிட்ட நாவலுக்கு விருது கொடுக்கப்பட்டிருக்கிறது, அதை எழுதியவர் இந்த எழுத்தாளர் என சொல்வதில் என்ன பிரச்னை என கேள்வி எழுப்பினார்.
முதல் வரியிலேயே சாகித்திய அகடாமி விருது ’தலித்’ எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என எழுதுவதன் மூலம் அவர்களது நெஞ்சில் எவ்வளவு ஜாதி வன்மம் இருக்கிறது என பேசி ஆதங்கப்பட்ட அவர், இப்படி எழுதி, பேசி தன்போன்ற தமிழ் எழுத்தாளர்களை ஒரு சாதிய அடையாளத்திற்குள் அடைத்து மிகவும் புண்படுத்துவதாக மேடையிலேயே வேதனைப்பட்டது அங்கிருந்த வாசகர்களை நிச்சயம் காயப்படுத்தியிருக்கும்.
’நான் தமிழ் எழுத்தாளன் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள், நான் தமிழ் சமூக வாழ்க்கையை எழுதுகிற எழுத்தாளன் என்று புரிந்துக்கொள்ளுங்கள்,தமிழ் சமூக வாழ்க்கையின் பல்வேறு முகங்களை எழுதக்கூடிய எழுத்தாளன் என்று புரிந்துக்கொள்ளுங்கள்’ என்று அவர் மேடையில் மீண்டும் மீண்டும் சொன்ன வார்த்தைகளை கேட்டதும் எழுத்தாளர்களை கொண்டாடித் தீர்ப்பதாக மார்த்தட்டிக்கொள்ளும் இந்த தமிழ் சமூகம் தலைகவிழ்ந்திருக்கும்.
’என்னை சாதிய எழுத்தாளனாக பார்க்காதீர்கள் ; தமிழ் எழுத்தாளனாக பாருங்கள்’ என இமயம் திருவண்ணாமலையில் சொன்னது, அவரை தலித் எழுத்தாளர் என சொல்லி, பாகுபடுத்திய அத்தனைபேரின் கன்னங்களில் விழுந்த அழுத்தமாக அறை.
இதபிறகாவது, எழுத்தாளர்களை எழுத்தாளர்களாக பார்க்கும் நிலை இங்கு ஏற்படவேண்டும் !