World Population Day 2021 | மக்கள் தொகையைப் பொறுத்தவரை, தமிழ்நாடு சந்திக்க இருக்கும் சவால்கள் என்ன?
2036-ஆம் ஆண்டில், மாநிலத்தின் சராசரி வயது 40-ஆக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்தியாவின் மிகவும் முதுமையான மாநிலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இன்று உலக மக்கட்தொகை தினம் கொண்டாடப்படுகிறது. நல்ல தொழில் வளர்ச்சி கண்டுள்ள ஒருசில இந்திய மாநிலங்களுள் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது. இருப்பினும், மக்கள்தொகை தொடர்பான இலாபத்தைப் பெற பல சவால்களை மாநிலம் சந்திக்க வேண்டியுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 2036-ஆம் ஆண்டில், மாநிலத்தின் சராசரி வயது 40 ஆக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்தியாவின் மிகவும் முதுமையான மாநிலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2011 கணக்கெடுப்பில், முதுமையான மாநிலமாக விளங்கிய கேரளாவை தமிழ்நாடு முந்தும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பொதுவாக, ஒரு சமூகத்தில் 0-14 வயதுடைய குழந்தைகளும், 65 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களும் பொருளாதார ரீதியாக பிறரை சார்ந்துள்ளனர். சார்புநிலை விகிதம் என்பது, வேலை செய்ய இயலாத வயதினரை, வேலை செய்ய இயலும் வயதினருடன் ஒப்பிடும் எண்ணிக்கை ஆகும்.
2036ல் தமிழ்நாட்டில் வேலை செய்ய இயலாத வயது பிரவினரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. மொத்த சார்புநிலை விகிதம் 571 என்று கணிக்கப்படுகிறது. அதாவது, ஆயிரம் பேரில் 571 பேர் சராசரியாக வேலைசெய்ய இயலாத வயதுக்குள் உள்ளனர். இதில், குழந்தைகள் சார்புநிலை விகிதம் 244 என்றும், முதியவர்கள் சார்பு நிலை விகிதம் 327 என்றும் கூறப்படுகிறது. (2011ல் முதியவர்கள் சார்பு நிலை விகிதம் - 160)
எனவே, எதிர்காலத்தில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இருப்பதால், பொருளாதார அடிப்படை கட்டமைப்பை மாற்ற வேண்டிய மிகப்பெரிய சவாலை தமிழ்நாடு எதிர்கொள்ள இருக்கிறது.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி;கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா,கோவா, பஞ்சாப், இமாச்சல் பிரேதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் அதிகளவிலான முதியவர்கள் சார்பு நிலை விகிதத்தைக் கொண்டுள்ளன. எனவே, வரும் நாட்களில் முதியவர்களின் நலனை பேணிக்காக்கும் விதமாக மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, முதியவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் தொலைநோக்கு பார்வையில் நலவுதவித் திட்டங்களை வகுப்பது முக்கியமானதாகும்.
முதியவர்கள் நலனை பேணிக்காக்க வேண்டும்:
தற்போது, 60 வயதுக்கு மேல் உள்ள வயது பிரிவினரில், 5.7 சதவிகிதம் பேர் எந்தவித குடும்ப ஆதரவின்றி தனித்து வாழ்ந்து வருவதாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கிறது . 45, வயதுக்கு மேற்பட்டவர்களில் 3.7% பேர் தனித்து வாழ்வதாக கூறப்படுகிறது.
45 வயதுக்கு மேல் உள்ள வயது பிரிவினரில் அதிகமானோர் தனித்து வாழும் இந்திய மாநிலங்களுள் முதன்மையானதாக தமிழ்நாடு உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களில், 8.5% பேர் தமிழ்நாட்டில் தனித்து வாழ்ந்து வருகின்றனர். அண்டை மாநிலமான கேரளாவில் இந்த எண்ணிக்கை 3.3% ஆக உள்ளது. விவாகரத்து, கணவனை இழந்த பெண்/ மனைவியை இழந்த கணவன், திருமணம் செய்து கொள்ளதாது போன்ற காரனங்களால் தனித்து வாழ்கின்றனர். மனஅழுத்தம், பதற்றம், மனசோர்வு, தற்கொலை எண்ணங்கள் போன்ற மனநல பிரச்னைகள் போன்ற பிரச்னைகளுக்கு இவர்கள் உள்ளாகி வருகின்றனர். எனவே, பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் சமூகம் சார்ந்த பல சிக்கல்களையும் தமிழ்நாடு சந்திக்க இருக்கிறது.