TVK Vijay: நடிகர் விஜய் சுற்றுப்பயணத்தை இன்னும் தொடங்காதது ஏன்? ஓ.. காரணம் இதுதானா!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்காமல் இருப்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியல் களம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கு போட்டியாக வரும் சட்டமன்ற தேர்தலில் களத்தில் குதித்திருப்பவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
தேர்தல் களத்தில் தவெக:
கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய அதன்பின்பு அரசியலில் தீவிரமாக ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அரசியலில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தும் நோக்கில் இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும் அறிவித்தனர். இதனால், தமிழக அரசியல் களத்தில் விஜய்யின் நடவடிக்கைகள் அதிரடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சுற்றுப்பயணத்தை தொடங்காத விஜய்:
ஆனால், அவரது நடவடிக்கைகள் அவ்வப்போது மட்டுமே இருப்பது தவெக தொண்டர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று கடந்தாண்டு இறுதி முதலே தகவல் வெளியாகி வருகிறது.
பின்னர், கடந்த மார்ச் மாதம் இறுதியில் சுற்றுப்பயணத்தை தொடங்குவார் என தகவல் வெளியாகிய நிலையில் அதுவும் நடக்கவில்லை. அவரது பிறந்தநாளில் சுற்றுப்பயண அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜனநாயகன் பட அப்டேட் மட்டுமே வந்தது.
காரணம் என்ன?
இந்த சூழலில், நடிகர் விஜய் ஏன் இன்னும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு விட்டாலும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெயர் நன்றாக தமிழ்நாடு முழுவதும் பதிவாகியிருந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை.
இதனால், தேர்தல் ஆணையத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமாக ஒரு சின்னத்தை பெற்ற பிறகு தனது சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. சின்னத்தை பெற்ற பிறகே தனது சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்காக விஜய் காத்துள்ளார். இதன் காரணமாகவே விஜய்யின் சுற்றுப்பயண அறிவிப்பு இன்னும் அதிகாரமாக வெளியாகாமல் இருப்பதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சின்னமே வெற்றிக்கு படிக்கல்:
ஏனென்றால், தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ளதால் தமிழ்நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே சுற்றுப்பயணம் வர அவகாசம் உள்ளது. இதனால், தனது சுற்றுப்பயணத்தின்போதே சின்னத்தையும் சேர்த்து பிரபலப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளார். ஏனென்றால் திமுக-வின் உதயசூரியன் சின்னமும், அதிமுக-வின் இரட்டை இலை சின்னமும் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சின்னம் ஆகும். இந்த சின்னத்தை தாண்டி தங்களது சின்னத்தை கொண்டு செல்ல வேண்டும் என்றால், அதற்கு மிகப்பெரிய அளவிலான விளம்பரம் தேவைப்படுகிறது.
சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களும், தவெக-வினரும் மிகவும் பரபரப்பாக இயங்கினாலும் 40 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மத்தியில் சின்னத்தை காெண்டு செல்வது மிகவும் சவாலான ஒன்றாகும். இதனால், தனது சுற்றுப்பயணத்தின்போதே விஜய் தவெக-வின் சின்னத்தையும் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் முழுமையையும் தாங்கி நிற்பவராக விஜய்யே இருப்பதால், அவரால் மட்டுமே சின்னத்தையும் மக்கள் மத்தியில் முழுவீச்சில் கொண்டு செல்ல முடியும்.
ஆட்டோ சின்னமா?
தமிழக வெற்றிக் கழகத்தினர் தங்களுக்கு ஆட்டோ சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் விருப்பம் தெரிவித்துள்ளனர். விரைவில் சின்னத்தை பெற்று, அதை மக்கள் மத்தியில் தீவிரமாக கொண்டு சேர்க்கவும் தமிழக வெற்றிக் கழகம் முனைப்பு காட்டி வருகிறது. தற்போது, பூத் கமிட்டி உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தமிழக வெற்றிக் கழகம் முனைப்பு காட்டி வருகிறது.





















