Vijayakanth Funeral: விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் நல்லடக்கம்: சென்னை மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்தின் உடலை கோயம்பேட்டில் நல்லடக்கம் செய்ய சென்னை மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்தின் உடலை கோயம்பேட்டில் நல்லடக்கம் செய்ய சென்னை மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே அவரின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டது. நேற்று (டிச.28) காலை நுரையீரல் அழற்சி காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது.
கேப்டன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்தை இறுதியாக ஒருமுறை காண தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
இன்று மாலை அடக்கம்
நேற்று சென்னை, தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று மதியம் தொடங்கி விஜயகாந்தின் உடல் மீண்டும் தேமுதிக அலுவலகத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு இன்று மாலை 4.45 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது.
நேற்று முதலே பல பிரபலங்கள் விஜயகாந்துக்கு நேரிலும் இணையதளத்திலும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இன்றும் அவரது உடலுக்கு தொடர்ந்து பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கோயம்பேடு ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள அவரது கட்சி அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்த தீர்மானம் சென்னை மாநகராட்சி மன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவேற்றப்பட்டது. இறுதி ஊர்வலம் செல்ல வாகனம் தயார் செய்யப்பட்டு தீவுத்திடலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் ஊர்வலம் தொடங்க உள்ளது.
எதற்காகத் தீர்மானம்?
பொது இடங்கள், தனியார் இடங்கள் ஆகியவற்றில் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய முன்கூட்டியே சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, அரசுத் தரப்பில் அனுமதி பெற வேண்டும். அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல், அவரின் கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்ய, மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல், முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது. தீவுத்திடல் ஏற்பாடு, இறுதி ஊர்வல வாகன ஏற்பாடு மற்றும் அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுள்ளது.
கோயம்பேட்டில் நடைபெற உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறுதிச் சடங்கில், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோர் இருப்பார்கள் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.