செவிலியர் போராட்டம்: குழந்தைகள் மீதும் தாக்குதலா?அநாகரிகத்தின் உச்சம் - உதயநிதி ஆவேசம்
Abusive Warriors மூலம் செவிலியர்களையும், அவர்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவது அநாகரிகத்தின் உச்சம் - உதயநிதி ஸ்டாலின்

குழந்தைகளைத் தாக்குவதற்கு பெயர் என்ன தாய்மாமன் தடியடி திட்டமா?
பணி நிரந்திரம், சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாது:
பணி நிரந்தரம் - சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் செவிலியர்கள் மீது காவல்துறையினரை ஏவி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த Dummy CM-ன் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
எதிர்க்கட்சியாக இருந்த போது, ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று சொன்ன இன்றைய கோமாளி ஆட்சியாளர்கள், இன்றைக்கு செவிலியர் போராட்டத்திற்கு முதல் ஆளாக காவல்துறையை அனுப்பி அராஜகம் செய்கின்றனர்.
ஒருபக்கம், போராட்டக்களத்தில் சிறிய இடத்தில் செவிலியர்களை அடைப்பது - மின்சாரத்தை நிறுத்துவது - உயிர் வேணுமா வேண்டாமா என்று மிரட்டுவது என அத்துமீறும் இந்த ஆட்சியாளர்கள் - மறுப்பக்கம், Abusive Warriors மூலம் செவிலியர்களையும் - அவர்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவது அநாகரிகத்தின் உச்சம்.
செவிலியர்கள் மீது சிறு கீறல் விழுந்தாலும் பொறுக்க மாட்டோம் என அன்றைக்கு punch dialog பேசிவிட்டு, இன்றைக்கு போராடும் செவிலியர்களை மட்டுமின்றி அவர்களின் குழந்தைகள் மீது கூட தாக்குதல் நடத்துவது வெட்கக்கேடு. குழந்தைகளைத் தாக்குவதற்கு பெயர் என்ன தாய்மாமன் தடியடி திட்டமா?
பெட்டி வேட்பாளரின் போலிக் கண்ணீரை துடைப்பதற்காக நீளும் முதல்வரின் கரங்கள், உயிர்காக்கும் செவிலியர்களின் உண்மைக் கண்ணீரைத் துடைக்க மறுப்பது ஏன்?. செவிலியர்கள் மீதான அடக்குமுறையை உடனே நிறுத்தி, அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எம்பி கனிமொழியின் கண்டன பதிவில், ‘பணி நிரந்தரம், சம ஊதியம், ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராடிவரும் செவிலியர்களை ஒடுக்க முற்படுகிறது தவெக அரசு. தற்காலிகப் பணியில் உள்ள செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனத் தேர்தல் வாக்குறுதியில் ரீல் விட்டுவிட்டு, இப்போது அதே செவிலியர்களை ஏமாற்றியிருக்கிறது இந்த ரீல் அரசு. செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















