TVK Vijay Statement: ஒரு மாதம் ஓய்வு; மீண்டும் அரசியலுக்கு திரும்பிய விஜய்; கரூர் சம்பவத்திற்குப்பின் முதல் அறிக்கை
கரூர் சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன நிலையில், இவ்வளவு நாட்கள் ஓய்விற்குப் பின் விஜய் மீண்டும் அரசியலுக்கு திரும்பியுள்ளார். அவரது வருகையின் அடையாளமாக, ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

கரூரில், கடந்த மாதம் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில் 41 பேர் உயிரிழந்தனர். அன்று சென்னை திரும்பி வீட்டிற்குள் சென்ற விஜய், எந்த செயலிலும் ஈடுபடவில்லை. பின்னர், நேற்று தான் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை வரவழைத்து, அவர்களை தனித்தனியாக சந்தித்து பேசி, ஆறுதல் கூறினார். இந்நிலையில், இன்று, மீண்டும் தனது அரசியல் பயணத்தை தொடங்கும் வகையில், அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் என்ன கூறியுள்ளார் விஜய்.? பார்க்கலாம்.
விஜய் வெளியிட்ட அறிக்கையில் என்ன கூறியுள்ளார்.?
மழையால் நெல்மணிகள் வீணாவது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜய், தொடர் மழையால், விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் முதல்முறை வீணான போதே, துரிதமாக செயல்பட்டு மீதமுள்ள நெல்மணிகளை தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், விவசாயிகளின் மீது உண்மையாகவே அக்கறை கொண்டிருக்கும் அரசு என்றால், அது அவர்களின் வாழ்வாதாரத்தை காத்து, பொருளாதார ரீதியில் அவர்கள் உயர்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மாறாக, ஏழை விவசாயிகள் தங்களின் கடின உழைப்பின் வாயிலாக விளைவித்தவற்றை, உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல், அவற்றை மழையில் நனையவிட்டு வீணாக்கி, ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஒரு அரசை என்னவென்று சொல்வது என வேதனை தெரிவித்துள்ளார்.
ஏழை விவசாயிகள், உழவுத் தொழில் மூலமே பணம் சம்பாதித்து வாழ்க்கையை நடத்தி வருவதாகவும், அவர்கள் பொருளாதார ரீதியில் உயர, அவர்களின் மூலதனமே விவசாயமும், உழைப்பும் மட்டுமே என குறிப்பிட்டுள்ள விஜய், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்று, பணத்தை கையில் பாத்துவிடாமல் தடுப்பதே திமுக அரசின் நோக்கமாக இருந்து வருகிறதா என்ற ஐயம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கு விஜய் எழுப்பியுள்ள கேள்விகள்
- டெல்டா விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகளை உரிய நேரத்தில், உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்யாமல், அவர்களின் வாழ்வாதாரத்தை வீணாக்கியதன் காரணம் என்ன.?
- பருவமழையை விவசாயிகள் நம்பியிருக்கும் நிலையில், அந்த பருவமழையால் விவசாயப் பயிர்கள் மற்றும் விளைநிலங்கள் சேதமடையாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன.?
- விவசாய நிலத்திலிருக்கும் அதிகப்படியான தண்ணீர் தானாக வெளியேறி, சேமித்து வைக்கப்பட வேண்டிய நீர்நிலைகளை சென்றடைய போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா.?
- விளைவிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட தானியங்கள், மழையில் நனைந்து வீணாகாமல், நல்ல முறையில் பாதுகாப்பாக சேமித்து வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன.?
இதுபோன்று இன்னும் சில கேள்விகளை எழுப்பியுள்ள தவெக தலைவர் விஜய், வடகிழக்கு பருவமழைக் காலம் இன்னும் நீடிக்க உள்ளதால், ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி, இனி வரும் மழையினால் நெல் உள்ளிட்ட பயிர்கள் வீணாகாமல் தடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
அதோடு, பருவமழையின் தாக்கத்திலிருந்து மக்களை காக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, போர்க்கால அடிப்படையில் உண்மையாகவே மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.





















