கடலூர் அருகே சோகம்! மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு: அதிர்ச்சியில் கிராமம்!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் மின்னல் தாக்கி 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் மின்னல் தாக்கி 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மக்காச் சோளம் பயிரிட்டிருந்த நிலத்தில் களை எடுக்கும் போது மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர்.
மின்னல் தாக்கி நான்கு பெண்கள் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, இவர் வயலில் மக்காச்சோளம் பயிர் செய்துள்ளார். வயலில் வேலை செய்வதற்காக கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த சின்ன பொண்ணு (என்கிற) ராஜேஸ்வரி, தவமணி, பாரிஜாதம், கணிதா, ஆகிய 4 பேர் உரம் போட்டு களை எடுத்துக் கொண்டிருந்த பொழுது அப்பகுதியில் நேற்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது.
அப்பொழுது திடீரென்று இடி மின்னல் தாக்கியதில் அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்த வயல் உரிமையாளர் ராஜேஸ்வரி, கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பாரிஜாதம், சின்ன பொண்ணு என்கிற ராஜேஸ்வரி, தவமணி, கணிதா, ஆகிய 5 பேர் மீது இடி மின்னல் தாக்கியதில் ராஜேஸ்வரி, பாரிஜாதம், சின்ன பொண்ணு என்கிற ராஜேஸ்வரி, கணிதா, சம்பவ இடத்திலேயே இறந்தனர். தவமணி பலத்த காயம் ஏற்பட்டு அவரை அப்பகுதி மக்கள் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்னல் தாக்கி இறந்து போன ராஜேஸ்வரி, பாரிஜாதம், சின்ன பொண்ணு என்கிற ராஜேஸ்வரி, கணிதா ஆகிய 4 பேர் உடலை வேப்பூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது இடி மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடி, மின்னல் தாக்கி உயிரிந்து திட்டக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள உடலுக்கு அமைச்சர் சி.வே.கணேசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
மின்னல்
மின்னல் என்பது மழைக் காலங்களில் திரண்ட கார் மேகங்களின் இடையே ஏற்படும் மிகப்பெரிய தீப்பொறிபோன்ற மின் பொறிக் கீற்றல். கண்ணைப்பறிக்கும் ஒளிவீச்சோடு, கோடுகளாய் வானில் கிளைத்து நொடிப்பொழுதில் தோன்றி மறையும் நிகழ்ச்சி தான் மின்னல். மின்னலோடு கூட பேரொலியாய் இடி இடிப்பதையும் கேட்கலாம். மழை மேகங்கள் (முகில்கள்) தமக்குள் இருக்கும் அணுக்கள் பல வழிகளிலும் உராய்ந்தோ பிறவாறோ மின்னூட்டம் பெற்று விடுகின்றன. மின்னூட்டம் பெறும் வழிபாடுகள் எல்லாம் முற்றிலுமாய் அறியப்படவில்லை. ஆனால் இப்படி மின்னூட்டம் பெற்று அது அதிகமாகிவரும் பொழுது, எதிர் மின்னூட்டம் கொண்ட பிற மேகக் கூட்டங்கள் அருகே வரும் பொழுது, மின்னூட்ட ஈர்ப்பு விசையால் காற்றின் வழியே மின் ஆற்றல் பாய்ந்து மின்னூட்டத்தை இழக்கின்றன. இவ்வாறு காற்றின் வழியே மின்னூட்டம் பாயும் பொழுது மின்பொறியாய் (தீப்பொறி போல) ஒளிவிடுகின்றது. ஒளிக்கீற்று போல் ஒளி இழையாய் தெரியும் பகுதியில் காற்று மின் மயமாக்கப் படுகின்றது.





















