தர்மபுரி : ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை..
ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில், வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு-நீர்வரத்து அதிகரித்து பிரதான அருவிகளை மூழ்கடித்து செல்வதால், சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
காவிரி ஆற்றில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு தமிழக எல்லையான பிலிகுண்டுலு வினாடிக்கு 500 கனஅடி நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கியவுடன், கோடை மழை அவ்வப்போது செய்து வந்தது. இதனால் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கோடை மழை பரவலாக பொழியத் தொடங்கியது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 7,500 கனஅடியாக நீர்வரத்து இருந்தது.
தொடர்ந்து தமிழக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, செந்நிறத்தில் வரும் தண்ணீர் ஒகேனக்கல் பிரதான அருவி, அருவிக்கு செல்லும் நடைபாதை உள்ளிட்ட பகுதிகளை மூழ்கடித்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவும், அருவி, ஆற்றுப் பகுதிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி தடை விதித்துள்ளார். தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவை அடுத்து ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நுழைவாயிலை பூட்டி, காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல், ஆலம்பாடி உள்ளிட்ட காவிரி ஆற்றுப் பகுதிகளில் வருவாய், தீயணைப்பு துறை, ஊரக வளர்ச்சி, காவல் துறையினர் உள்ளிட்டோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோடை காலம் தொடங்கியதிலிருந்து ஒகேனக்கல்லுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்திருப்பதால், சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருவதால் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.