TN Rain Update: மழையும் இல்ல, லீவும் விட்டாச்சு..! என்ன பண்ணலாம், உங்களுக்கான ஆப்ஷன்கள் இதோ..!
TN Rain Update:கனமழை காரணமாக வீட்டில் முடங்கியவர்கள் பொழுதுபோக்கிற்காக என்ன செய்யலாம் என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
TN Rain Update: அதிகனமழைக்கான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டு இருப்பது, பொதுமக்களிடையே நிலவிய அச்சத்தை குறைத்துள்ளது.
குறைந்தது கனமழை வாய்ப்பு:
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உள்ளிட்ட 4 வட மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. ராணிப்பேட்டை மற்றும் வேலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் வழங்கப்பட்டது. இதையடுத்து, 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. குறிப்பிட்ட மாவட்டங்களில், அத்தியாவசியம் அல்லாத அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான், வடமாவட்டங்களில் அதிகனமழை பெய்வதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக, தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் இருந்தபடி என்ன செய்யலாம்?
இன்று மழை குறையும் என தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் இன்னும் வடியவில்லை. இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட விடுமுறையால் மாணவர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்த சூழலில், வீட்டில் இருந்தபடியே இன்றைய நாளை மகிழ்ச்சியாக கழிக்க என்ன மாதிரியான செயல்களில் ஈடுபடலாம் என்பதற்கான ஆலோசனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பொழுதுபோக்கிற்கான ஆலோசனைகள்:
- பெற்றோர் அல்லது வீட்டில் உள்ள பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கதைகளை கூறலாம். படிக்கும் திறன் கொண்ட குழந்தைகளுக்கு அவர்கள் வாசிக்க விரும்பும், கதை புத்தகங்களை வழங்கலாம்
- செஸ், கேரம் போர்ட் போன்ற போர்ட் விளையாட்டுகளை கூட்டாக சேர்ந்து விளையாடலாம்
- ஏதேனும் ஒரு பொருளை வீட்டிலேயே மறைத்து வைத்து புதையல் வேட்டை போன்ற விளையாட்டுகளையும் முன்னெடுக்கலாம்
- குடும்பமாக சேர்ந்து வீட்டிலேயே ஏதேனும் படம் பார்த்து மகிழலாம்
- சகோதர, சகோதரிகள் அல்லது பெற்றோருடன் சேர்ந்து பாட்டுக்கு பாட்டு, நடனம் போன்றவற்றில் ஈடுபடலாம்
- அக்கம் பக்கத்தில் வசிக்கும் நண்பர்களை வீட்டுக்குள் திரட்டி வினாடி வினா போன்ற சுவாரஸ்யமான விளையாட்டில் ஈடுபடலாம்
- குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து புதிர்களை தீர்ப்பது போன்ற விளையாட்டிலும் பங்கேற்கலாம்
- ஒரு மாறுதலுக்காக குழந்தைகளை ஆசிரியர்களாகவும், பெற்றோர் குழந்தைகளாகவும் மாறி, இருவரும் தங்களது பள்ளி அனுபவங்களை பகிர்ந்துகொள்ளலாம்
- பாடல்கள், கவிதை எழுதுவது மற்றும் படங்கள் வரவது போன்ற தனித்திறமைகளை வெளிப்படுத்தலாம்
- பெற்றோர் மற்றும் குழந்தைகள் சேர்ந்து வீடியோ கேம் விளையாடலாம்
- இசைக்கருவிகள் ஏதேனும் வாசிக்க தெரிந்தால், வீட்டிலேயே ஜாலியான ஒரு இசைக்கச்சேரியை நிகழ்த்தலாம்
- சூழலுக்கு ஏற்ற உணவை வீட்டிலேயே அனைவரும் சேர்ந்து சமைத்து உண்டு மகிழலாம்
- காகிதங்களில் படகுகள் செய்து ஓடும் மழைநீரில் விடலாம்
- வீட்டிற்கு வெளியே பாதுகாப்பான சூழல் இருந்தால், குளிர்ந்த காற்றுடன் இதமாக சற்று தூரம் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்
- அறைகள் ஏதேனும் மோசமாக கலைந்து இருந்தால் சீர்படுத்தலாம். அதிலிருந்து, நீங்கள் நிண்ட நாட்களாக தேடும் பொருள் ஏதேனும் கிடைக்க வாய்ப்புண்டு.