Seeman: சீமானைத் துருப்புச் சீட்டாக்கும் திமுக! விஜய்யை வீழ்த்த ஆதரவு தருமா அதிமுக?
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள சீமானுக்கு ஆதரவு அளிப்பது குறித்து திமுக ஆலோசித்து வரும் நிலையில், அவர் பொது வேட்பாளராக களமிறங்குவார் என்று கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் இன்னும் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது.
சீமானுக்கு திமுக ஆதரவா?
இந்த இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை மேலும் வலுப்படுத்த தவெக உறுதியாக செயல்பட்டு வருகிறது. ஆனால், இடைத்தேர்தலில் தவெக-வை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று திமுக முனைப்பாக உள்ளது. இந்த நிலையில், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் சார்பாக சீமான் போட்டியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் இடைத்தேர்தல் தேதி அறிவித்த பிறகு சீமானுக்கு ஆதரவா? என்பது குறித்து அறிவிப்போம் என்று கூறினார். திமுக-வை மிக கடுமையாக விமர்சித்து உருவான நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள் விஜய் கட்சி தொடங்கிய பிறகு செயல்படும் விதம் முற்றிலும் மாறுபட்டு உள்ளது.
பொது வேட்பாளர்:
தவெக தொடங்கிய பிறகு ரஜினியை சீமான் சந்தித்ததும், மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்ததும் நாம் தமிழர் கட்சியினர் பலரது மத்தியிலுமே அதிருப்தியை உண்டாக்கியது. ஏனென்றால், கடந்த காலங்களில் சீமான் அவர்களை மிக கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். மேலும், தவெக தொடங்கப்பட்ட பிறகு சீமான் திமுக-வை விமர்சித்துப் பேசுவதையும் மிகப்பெரிய அளவில் குறைத்துக் கொண்டார்.
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தவெக-விற்கு எதிராக சீமானை பொதுவேட்பாளராக களமிறக்க திமுக - அதிமுக திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில், இடைத்தேர்தல் தேதிக்கு பிறகு சீமானுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது பொதுவேட்பாளராக சீமான் இறங்குவதை ஏறத்தாழ உறுதி செய்திருப்பதாகவே கருதப்படுகிறது. இதன்மூலம் விஜய்க்கு எதிராக விஜய்யின் அரசியல் வருகையை ஆரம்ப காலத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்ற சீமானையே துருப்புச்சீட்டாக திமுக பயன்படுத்த உள்ளது உறுதியாகிறது.
அதிமுக ஆதரவு அளிக்குமா?
சீமானை பொதுவேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றால் அதற்கு திமுக-விற்கு அதிமுக-வின் ஆதரவும் கிடைக்க வேண்டும். தாங்கள் பறிகொடுத்த தொகுதியைக் கைப்பற்ற அதிமுக தீவிர முனைப்பில் உள்ளது. இந்த நிலையில், சீமானுக்கு திமுக ஆதரவு அளித்தால் அதிமுக ஆதரவையும் பெற நாம் தமிழர் முயற்சிக்கவும் வாய்ப்பு உண்டு.
அவ்வாறு திமுக, அதிமுக ஆதரவுடன் பொது வேட்பாளராக சீமான் களமிறங்கினால் அவர் தவெக-விற்கு சவால் அளிக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேசமயம், இந்த சம்பவம் அரங்கேறினால் திராவிட கட்சிகளுக்கு எதிராக உருவான நாம் தமிழர் திராவிட கட்சிகள் ஆதரவில் போட்டியிடுவதா? என்ற விமர்சனம் சீமானுக்கும், திமுக அதிமுக மறைமுக கூட்டணி உறுதி என்ற தவெக விமர்சனத்தையும் இரு கட்சிகளும் எதிர்கொள்ளும் சூழல் உண்டாகும்.
ட்ரெண்டிங் செய்திகள்





















