Annamalai: “24 மணிநேரம் கெடு; முடிந்தால் என் மீது கை வையுங்கள்” - தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை சவால்...!
வடமாநில தொழிலாளர்கள் குறித்த அறிக்கையின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வடமாநில தொழிலாளர்கள் குறித்த அறிக்கையின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,"வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும். பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்!” என தமிழ்நாடு அரசுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
முன்னதாக வடமாநில தொழிலாளர்கள் குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக பொய்யான செய்திகள் பரப்பப்படுவது வருத்தமளிப்பதாகவும், தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் வட இந்தியத் தொழிலாளர்களின் பெரும் பங்கினை நாங்கள் அறிவோம் எனவும் கூறியுள்ளார்.
மேலும் வட இந்திய நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதத்தையும், வெறுப்புப் பிரச்சாரத்தையும், தமிழர்களாகிய நாங்கள் ஆதரிக்கவில்லை எனவும் அண்ணாமலை கூறியிருந்தார். வட இந்திய சகோதர சகோதரிகளின் பங்களிப்பை தமிழ்நாட்டின் பொது மக்கள் வரவேற்கின்றனர். ஆகவே, தமிழகத்தில் வட இந்திய சகோதர சகோதரிகள் தாக்கப்படுவதாக பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதை, தமிழக பாஜக கடுமையாக எதிர்க்கிறது எனவும் கூறியிருந்தார்.
அதேசமயம் இந்தி எதிர்ப்பு போராட்டம் , திமுக எம்.பி. தயாநிதிமாறன், அமைச்சர்கள் பொன்முடி, மூர்த்தி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வட இந்திய மக்களை ஏளனமாக பேசியதாக கூறி, திமுகவையும், மாநில அரசையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கிடையில், அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் கலவரத்தை தூண்டுதல், வதந்தி பரப்புதல், மோதல் ஏற்படும் வகையில் பேசுதல், குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக தவறான கருத்தை பதிவு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.