TN Assembly : 'தமிழ்நாடு எங்கள் நாடு’ என்று முழக்கமிட்ட திமுக கூட்டணி கட்சிகள்.. எதிர்ப்புக்கு மத்தியில் ஆளுநர் தமிழில் உரை...!
சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழில் பேசிக்கொண்டு இருந்தபோது, 'தமிழ்நாடு எங்கள் நாடு' என அவருக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சியினர் முழக்கமிட்டனர்.

அனைவருக்கும் வணக்கம் என கூறி சட்டப்பேரவையில் தமிழில் தனது உரையை தொடங்கினார் ஆளுநர் ரவி. அதில், “ மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே என உரையை வாசித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி. என் இனிய தமிழ் சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம். சட்டப்பேரவையில் எனது உரையை ஆற்றுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்.” என பேசினார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழில் பேசிக்கொண்டு இருந்தபோது, 'தமிழ்நாடு எங்கள் நாடு' என அவருக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சியினர் முழக்கமிட்டனர். காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராக தற்போது முழக்கமிட்டு ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதம் இல்லாத உரையாக கணிணியை பார்த்து ஆளுநர் உரையாற்றினார். அதில்
- அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படுவதற்கு ஆளுநர் பாராட்டு தெரிவித்தார்.
- கடந்த 50 கால ஆண்டு காலத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாட்டை முதலமைச்சர் வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்கிறார்.
- பல்வேறு துறைகளில் நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. விற்பனை விலை பாதிக்காமல் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
- போதைப் பொருட்கள் கடத்துவதை தடுக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
- தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் வடகிழக்கு பருவமழை மற்றும் புயலால் பெரிய அளவில் சேதம் இல்லை.
- தமிழ்நாடு மீனவர்களை கைது செய்வதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும். மீனவர்களுக்கு முன்னுரிமை அளித்து அரசு திட்டங்களை தீட்டி வருகிறது. சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
- பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுப்பதற்காக சர்வதேச நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
- அழிந்து வரும் உயிரினமான நீலகிரி வரையாடு இனத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
- மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினையில் மாநிலத்தின் நலனை தமிழ்நாடு அரசு பாதுகாத்து வருகிறது.
-
முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தமிழ்நாடு அரசு தேக்கி வைக்கிறது - நீர்மட்டத்தை தொடர்ந்து உயர்த்தவும்,ரூ.1,500 கோடியில் தமிழ்நாட்டின் நீர்வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- நீட் தேர்வு, ஏழை மற்றும் கிராம புற மாணவர்களுக்கு பின்னடைவாக இருக்கும் என்று இந்த அரசு கருதுகிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது - நீட் விலக்கு பெறும் மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது.
- அனைத்து ஆரம்ப பள்ளி குழந்தைகளும் சரளமாக வாசிக்கவும், கணித திறமை பெறவும் நடவடிக்கை - 2025 ஆம் ஆண்டிற்குள் அனைத்து குழந்தைகளுக்கும் அறிவியல், கணித அறிவை மேம்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது.
-
பேராசிரியர் அன்பழகன் பெயரில் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
-
2 புதிய பறவைகள் சரணாலயம் மற்றும் அகஸ்தியர் மலையில் யானைகள் சரணாலயம் தமிழ்நாடு அரசு அமைந்துள்ளது.
-
ஒரு கோடி பயனாளர்களை சென்றடைந்துள்ள மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு பாராட்டு
- தரமான உயர்கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்க்க அரசு உறுதி - உயர்கல்வி படிக்கும் மகளிருக்காக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
- நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு சிறப்பாக நடத்தியது
- விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் - முதல்வர் அறிவிப்பின்படி கபடி, கால்பந்து, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளது..
-
நீதிக்கட்சி ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட சத்துணவு திட்டம் பல பரிணாமங்களுடன் செயல்படுத்தப்படு வருகிறது - பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சருக்கு ஆளுநர் பாராட்டு
- சர்வதேச அளவில் திறன் கொண்டவர்களாக இளைஞர்களை மாற்றுவத்ற்கு நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது - இத்திட்டத்தில் இதுவரை 3 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
- திமுக அரசு பதவியேற்ற பின் அனைத்து கிராம வளர்ச்சிக்காக அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது - 2500 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- 149 சமத்துவபுரங்களை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது - 20,900 கி.மீ. நீள சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.
-
தற்போதுள்ள சென்னை பெருநகர் 5 மடங்கு விரிவாக்கம் செய்யப்படும் - 5,904 சதுர கி.மீ. பரப்பளவில் சென்னை பெருநகரம் விரிவாக்கம் செய்யப்பட்ட உள்ளது.
- பரந்தூரில் விமானம் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கையை தொடங்கியுள்ளது - சென்னை பெருநகரின் அருகிலேயே மாமல்லபுரத்தில் துணைக்கோள் நகரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! என்ற பாரதியாரின் பாடலோடும், வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் என்று சொல்லி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை முடித்தார்.





















