பஞ்சாப் சாலை விபத்தில் திருவண்ணாமலை ராணுவ வீரர் வீரமரணம்!
கண்ணமங்கலத்தை சார்ந்த இராணுவ வீரர், பஞ்சாபில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தார் இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள உடையார் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது (37). இவரது மனைவி அமுதா (32). ஆறுமுகம் இராணுவத்தில் கோர் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படை பிரிவில் பஞ்சாப்பில் பணியாற்றி வந்தார். இருவருக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் இல்லை.
இந்நிலையில், நேற்று பஞ்சாப் மாநிலத்தில் இருந்து இராஜஸ்தான் மாநிலத்திற்கு பயிற்சிக்காக இராணுவ வாகனத்தில் சக இராணுவ வீரர்களுடன் பயணித்துள்ளார். அப்போது திடீரென , எதிர்பாராத விதமாக நடைபெற்ற சாலை விபத்தில் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது .இந்த தகவலை ராணுவத்தினர் கண்ணமங்கலத்தில் இருக்கும் ஆறுமுகத்தின் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்த ஆறுமுகத்தின் மனைவி, மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகின்றனர். அவரது உடல் இன்று மாலை விமானம் மூலமாக சென்னை கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து ராணுவத்தினர் ஆறுமுகத்தின் சொந்த கிராமமான கண்ணமங்கலத்திற்கு கொண்டு வர உள்ளனர்.
ராணுவ வீரர் ஆறுமுகத்தின் உடல் நாளை குடும்பத்தினரிடம் மற்றும் உறவினர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு மாலை இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரியவருகிறது. தனது தாய் நாட்டிற்காக இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று ஆர்வம் கொண்ட ஆறுமுகம், 18 வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார். தற்போது, அவர் 37 வயதில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அவரது சொந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் வட்டாரத்தில் கூறியதாவது, ராணுவத்தில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு வரும் ஆறுமுகம் அனைவரோடும் அன்பாக பழக கூடிய குணமுள்ள, அமைதியான நபர் என்றும் ஆறுமுகம் பள்ளி பருவத்தில் மிகவும் நன்றாக படிக்க கூடிய மனிதர். அதுமட்டுமின்றி விளையாட்டுகளில் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். ஆறுமுகம் பள்ளி பருவம் படிக்கும் போது எங்கள் கிராமத்தை சுற்றி ஓடிவருவார். அப்போது அவரிடம் கேட்கும் போது நான் ராணுவத்தில் சேரப் போகிறேன் அதற்காக உடற்பயிற்சி மேற்கொள்கிறேன் என கூறுவார்.
இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பல பகுதிகளுக்கு சென்றுள்ளார். அப்போது எல்லாம் தோல்விகளை கண்டுள்ளார். அவருடைய வெற்றி என்னவென்றால் என்னுடைய தாய் நாட்டிற்காக நான் எல்லை பகுதியில் நின்று பாதுகாக்க வேண்டும் என்று கூறிவந்தார். அதற்கு ஏற்றார் போலவே இராணுவத்தில் பணியில் சேர்ந்து எல்லையில் நின்று பணியாற்றி வந்தார். தற்போது அவர் இறந்த இந்த சம்பவம் கேட்டு எங்கள் கிராமத்தினர் மற்றும் குடும்பத்தினர் மிகவும் சோகத்தில் உள்ளோம் என்று தெரிவித்தனர்.