Tamil In Temples | கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக நாளை மறுநாள் ஆலோசனை!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக நாளை மறுநாள் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நாளை மறுநாள் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்த ஆலோசனையில் அரசு அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கான சாத்தியக்கூறுகள், அதற்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதுமட்டுமின்றி, இந்த கூட்டத்திற்கு பிறகு இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்கு புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், கோவில்களை கண்காணிப்பதற்காக மாவட்ட அளவில் குழுக்களை அமைக்கவும் தமிழக அரசு அறிவிப்பை வெளியிடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக, சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்திருந்த அமைச்சர் சேகர்பாபு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை 100 நாட்களில் நிறைவேற்றுவோம் என்றும், இந்து சமய அறநிலையத்துறை சொத்துக்களை யார் ஆக்கிரமித்து இருந்தாலும் மீட்போம் என்றும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்றும், தமிழில் அர்ச்சனை செய்யாத கோயில்கள் கண்காணிக்கப்படும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Mucormycosis Factcheck | வெங்காயத்திலிருந்து கருப்பு பூஞ்சை பரவுமா? ஃப்ரிட்ஜில் தென்படும் பூஞ்சை ஆபத்தானதா? உண்மை என்ன?