Thalikku Thangam Scheme: பறிபோகிறதா ஏழைப் பெண்களின் கேடயம்..? தாலிக்குத் தங்கம் திட்டம் அவசியமா? அநாவசியமா?
எப்போதெல்லாம் தேவையும் கடன் சுமையும் கழுத்தை நெருக்குகிறதோ, அப்போதெல்லாம் தன்னிடமுள்ள தங்கத்தைக் கேடயமாகப் பயன்படுத்தி, குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்பவர்கள் பெண்கள்.
நம் நாட்டு விளிம்புநிலைப் பெண்களைப் பொறுத்தவரை தங்கம் அணிகலனோ, ஆடம்பரமோ, பகட்டோ அல்ல. அது ஒரு கேடயம். எப்போதெல்லாம் தேவையும் கடன் சுமையும் கழுத்தை நெருக்குகிறதோ, அப்போதெல்லாம் தன்னிடமுள்ள தங்கத்தைக் கேடயமாகப் பயன்படுத்தி, குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்பவர்கள் பெண்கள்.
இந்த உளவியலை உணர்ந்துதான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 1989-ல் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பெண் குழந்தைகளைப் பெற்றோர்கள் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே, பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்த பெண்களின் திருமணத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு 2011-ல் ஆட்சிக்கு வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தாலிக்குத் தங்கம் என்னும் முறையை அறிமுகப்படுத்தி, 4 கிராம் தங்கத்தை வழங்க ஆரம்பித்தார். 2016-ல் மீண்டும் முதலமைச்சரானபோது 8 கிராம் தங்கம் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த சூழலில், முதல்முறையாக முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலினும் கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி தாலிக்குத் தங்கம் திட்டத்தின்கீழ், திருமண நிதியுதவி, தங்கம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதற்காக 5 வகையான திருமண நிதியுதவி திட்டங்களுக்கும் 2021-22-ம் நிதியாண்டுக்கு ரூ.762.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பட்டம், பட்டயப் படிப்பு படித்த 53,599 பயனாளிகள், பட்டதாரியல்லாத 41,101 பயனாளிகள் என மொத்தம் 94,700 பயனாளிகள் பயனடைந்தனர்.
இந்த சூழலில், 2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ’’மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்ய இத்திட்டத்தை மாற்றியமைப்பது அவசியமாகிறது.
இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்’’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
5 திருமண நிதியுதவித் திட்டங்கள்
தமிழ்நாட்டில் மொத்தம் 5 வகையான திருமண நிதியுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு வறிய நிலையில் உள்ள விதவையரின் மகள்களின் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகியவை.
இதில் முதல் திட்டமான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் பொதுப் பிரிவினருக்கானது. பிற திட்டங்கள் கலப்புத் திருமணம், மறுமணம் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கானவை. இதில் மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தில்தான், பயனாளிகள் எண்ணிக்கை மிகவும் அதிகம். இது நிறுத்தப்பட்டால் அதிக எண்ணிக்கையிலான விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஒரு பவுன் தங்கம்
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின்படி, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும்; அத்துடன் பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும், மற்ற பெண்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். எனினும் பயனாளிகளின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட 5 வகையான திருமண உதவித் திட்டங்களால் 2020-21ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 8,373 பெண்கள் பயனடைந்தனர். இவர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின்கீழ் பயனடைந்தவர்கள் என்பதன்மூலமே இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை அறிய முடியும்.
ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.40 ஆயிரத்தைத் தொட்டுள்ள நிலையில், பெரும்பான்மை மக்களுக்கான தாலிக்குத் தங்கம் திட்டம் மாற்றப்படுவது விளிம்புநிலைப் பெண்களுக்குத் தங்கம் என்பதையே கனவாக மாற்றிவிடும்.
இந்த சூழலில், தாலிக்குத் தங்கம் திட்டத்தின்கீழ் பயனடைந்த பயனாளிகள் சிலரிடம் பேசினேன்.
'அம்மாவுக்குத்தான் அந்தப் பணம்'- திருப்பூர், முளையாம்பூண்டி ஒன்றியம், நால்ரோட்டைச் சேர்ந்த தமிழரசி மாணிக்கம்
''நான் பி.எஸ்சி. பட்டப்படிப்பை முடித்துவிட்டு, பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்கிறேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ், 1 பவுன் தங்க நாணயத்தையும் 50 ஆயிரம் பணத்தையும் பெற்றேன். தேர்தல் நேரத்தில் அந்தப் பணத்துக்காகப் பலமுறை அலைய வேண்டி இருந்தது.
அந்தப் பணமும் தங்கமும் என்னுடைய அம்மாவுக்குத்தான். அம்மா கூலி வேலைக்குச் செல்பவர். வட்டிக்குக் கடன் வாங்கித்தான் என்னுடைய திருமணத்தை நடத்தினார். அந்த கடனை எல்லாம் அடைக்க வேண்டும். 'தங்க நாணயத்தை வைத்து எனக்கு நகை செய்து தருகிறேன்' என்று அம்மா சொன்னார். 'வேண்டாம், முதலில் கடனை அடையுங்கள்' என்று கூறியிருக்கிறேன்.
உறவினர் குடும்பங்களில் ஏராளமான தங்கைகள் படித்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் திருமணத்துக்காகவும் காத்திருக்கின்றனர். என்னைப் படிக்க வைத்ததுபோல அவர்களையும் அவர்களின் பெற்றோர் சிரமப்பட்டுப் படிக்க வைத்தனர். அவர்களுக்கு இனிப் பணமும் தங்கமும் இல்லை என்பது நிச்சயம் ஏமாற்றம்தான்'' என்கிறார் தமிழரசி.
கணவர் தரப்பில் அரை பவுனுக்குத் தாலி செய்து போட்டிருக்கின்றனர். மாங்கல்யமும் தோடும் மட்டுமே அவரிடம் இருக்கும் தங்கம் என்றாலும், தாலிக்குத் தங்கம் திட்டத்தின் பயன் அம்மாவுக்குத்தான் சென்று சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் தமிழரசி.
காதல் திருமணத்தைத் தொடர்ந்து பயன்பட்ட பணம்
மதுரை, மேலூர் அருகே பழைய சுக்காம்பட்டியைச் சேர்ந்த ராணி தன்னுடைய அனுபவத்தைப் பகிர்கிறார். ''நான் காதல் திருமணம் செய்து கொண்டேன். அதுவும் எங்களுடையது கலப்புத் திருமணம். அந்த சூழலில் அம்மா வீட்டில் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை.
காதல் திருமணம் என்பதால், அதற்குப் பிறகு எங்களின் தேவைக்காகப் பணத்தைப் பயன்படுத்திக் கொண்டோம். ஒரு பவுன் நாணயத்தை மகளின் பெயரில் டெபாசிட் செய்துள்ளேன்'' என்கிறார் ராணி.
கடனை அடைக்க உதவியது
சேலத்தைச் சேர்ந்த ரம்யா கூறும்போது, ''அப்பா கூலி வேலை செய்பவர். என்னைக் கஷ்டப்பட்டுத்தான் பி.காம். படிக்க வைத்தார். 2014-ம் எனக்குத் திருமணம் நடந்தது. கடன் வாங்கித்தான் கல்யாணத்தை நடத்த வேண்டியிருந்தது. இந்தத் திட்டம் குறித்துக் கேள்விப்பட்டு, அரசிடம் விண்ணப்பித்தோம்.
ரூ.50 ஆயிரமும் அரை பவுன் தங்கமும் கிடைத்தது. அதைக் கொண்டு முக்கால்வாசிக் கடனை அடைத்தார் அப்பா. அந்த சூழலில் தாலிக்குத் தங்கம் திட்டம்தான் உபயோகமாக இருந்தது. கடனில் எங்கள் குடும்பம் மூழ்கிப் போகாமல் இருக்க உதவியது. அந்தத் திட்டத்தை நிறுத்தக்கூடாது'' என்கிறார் ரம்யா.
பெண்களுக்கு வழிகாட்டல்தான் தேவை
எனினும் இதை வேறொரு கோணத்தில் பார்க்கிறார் சமூகச் செயற்பாட்டாளர் ஓவியா. அவர் கூறும்போது, ''திமுக அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதாமாதம் வழங்குவதாகச் சொன்ன ரூ.1000 தொகை தேவையில்லை. அதற்கு பதிலாகப் பெண்கள் சுயமாகத் தொழில் செய்வதற்கோ, வேலைக்குச் செல்வதற்கோ உகந்த சூழலை ஏற்படுத்தலாம்.
அதேபோல தாலிக்குத் தங்கம் திட்டமும், பெண்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று மறைமுகமாக வலியுறுத்தும் விதமாக உள்ளது. இதற்கு பதிலாகப் பெண்களின் உயர் கல்விக்கு உதவும் வகையில் மாதம் ரூ.1000 தொகை என்ற திட்டம் வரவேற்கத்தக்கது'' என்று ஓவியா தெரிவித்தார்.
தாலி, தங்கத்தைவிடக் கல்விதான் முக்கியம்
தாலி, தங்கத்தைவிடக் கல்விதான் முக்கியம் என்கிறார் சமூக ஆர்வலர் கிர்த்திகா தரன். இதுகுறித்து அவர் கூறும்போது, ''முதலில் பெண்கள் திருமணத்துக்கான முக்கியத்துவத்தில் இருந்து வெளியே வரவேண்டும். தாலி, தங்கம் எல்லாவற்றையும்விடக் கல்விதான் முக்கியம். இந்தப் பணத்தைப் பெண்களின் வேலைவாய்ப்புக்கோ அல்லது கல்விக்கோ பயன்படுத்தலாம். தயவுசெய்து பெண்களுக்குத் திருமணம்தான் முக்கியம் என்பதையும், ஆண்களுக்கு வேலைவாய்ப்புதான் முக்கியம் என்பதையும் பாலினப் பாகுபாடாக எடுத்துச்செல்ல வேண்டாம்.
பொருளாதாரம் இல்லாத, சுயசார்பு இல்லாத பெண்களுக்குதான் தங்கம் தேவை. சம்பாதிக்க ஆரம்பித்தால் அவளே தங்கம்தான்'' என்கிறார் கிர்த்திகா தரன்.
*
பெண்களுக்கு எதைக் காட்டிலும் கல்விதான் முக்கியம். இதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. படித்து சொந்தக் காலில் நிற்கும் பெண்களுக்கு அரசு வழங்கும் 1 பவுன் நாணயமோ, 50 ஆயிரம் ரூபாயோ பெரிதல்ல.
ஆனால் அரசும் கல்வியாளர்களும், இன்ன பிற நிபுணர்களும் பேசுவதற்கும் நடைமுறைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது.
சிலருக்குக் கிடைக்கும்வாய்ப்பு, சமூகத்தில் எல்லோருக்கும் கிடைப்பதில்லையே? அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் கொடுக்கலாம். எதற்காக இட ஒதுக்கீடு இன்னும் அளிக்கப்படுகிறது? சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களைக் கை தூக்கிவிடத்தானே..?
படித்துமுடித்தபிறகு ஒரு பெண் சொந்தக் காலில் நின்று, அந்தத் தங்கத்தை வேண்டாமென்று கூடச் சொல்லட்டும். அந்த சூழல் வரும்வரை ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு அரசே வழங்கி வந்த உதவியை நிறுத்த வேண்டாம் என்பதே பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.