போலீஸ் எஸ்.ஐ வேலை ஆசை காட்டி 18 லட்சம் மோசடி ! கோயில் பூசாரி கைது ; அதிர்ச்சி தகவல்
போலீஸ் வேலைக்காக ரூ.18 லட்சம் வாங்கி போலி பண நியமன ஆணை வழங்கி மோசடி செய்த நபர் கைது

18 லட்சம் ரூபாய் மோசடி
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 34 ) இவர் தந்தை நடத்தி வரும் கார் மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது கல்லூரி நண்பர்கள் இருவர் , அரசு வேலைக்காக காஞ்சிபுரம் மாவட்டம் நாவலுாரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் ( வயது 39 ) என்பவரிடம் பணம் கொடுத்திருந்தனர்.
போலி பணி நியமன ஆணை
இதை அறிந்த சீனிவாசன் ரஞ்சித்குமாரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது போலீஸ் எஸ்.ஐ., வேலை வாங்கி தருவதாக கூறி , 2017 - ம் ஆண்டு முதல் 2023 ஆண்டு வரை பல தவணையாக 18 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார். பின் போலி பணி நியமன ஆணை கொடுத்து மோசடி செய்துள்ளார்.
ஏமாற்றப்பட்ட சீனிவாசன் சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்தார். புகார் குறித்து வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.
கோடிக் கணக்கில் மோசடி
இதில் ரஞ்சித்குமார் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் பலரிடம் , கோடிக் கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது. இவரை செய்த கைது போலீசார் போலி பணி நியமன ஆணைகள், புத்தகம் வங்கி பாஸ் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ரஞ்சித்குமார் படப்பையில் உள்ள கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பட்டா வாங்கி தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி
சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் ( வயது 39 ) இவர் அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகே , சரத் என்பவர் துணிக்கடை நடத்தி வந்தார்.
இருவரும் நட்புடன் பழகி வந்த நிலையில், தன் அக்காவின் மாமனார் வருவாய்த் துறையில் பெரிய அலுவலராக உள்ளதாகவும் பட்டா, சிட்டா உள்ளிட்டவற்றை எளிதில் வாங்கித் தருவதாகவும், கல்யாண சுந்தரத்திடம் சரத் கூறியுள்ளார்.
இதை நம்பிய கல்யாணசுந்தரம், கொரட்டூரில் உள்ள நிலத்திற்கு பட்டா வேண்டும் என சரத்திடம் கூறியுள்ளார். அப்போது, கலெக்டருக்கு கொடுக்க வேண்டுமென கூறி, கடந்த 2023, ஆகஸ்ட் 21ம் தேதி முதல், சிறுகச் சிறுக 5 லட்சம் ரூபாயை சரத் பெற்றுள்ளார்.
ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் பட்டா வாங்கி தராமல், சரத் ஏமாற்றி வந்துள்ளார். கல்யாண சுந்தரம் பலமுறை கேட்டதால், 1 லட்சம் ரூபாய் மட்டும், சரத் திருப்பி கொடுத்து விட்டு, மீதமுள்ள 4 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதுகுறித்து, எழும்பூர் கோர்ட்டில் கல்யாணசுந்தரம் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், வழக்கு பதிவு செய்யும்படி, கொடுங்கையூர் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கொடுங்கையூர் போலீசார், சரத் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





















