School Education : பதவி உயர்வு, கட்டாய மாறுதல்.! அரசுப் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு- செப்.25 தான் கடைசி தேதி
School Education : பள்ளிக்கல்வி அலுவலகப் பணியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் அல்லது பதவியில் பணிபுரிபவர்களுக்கு கட்டாய மாறுதல், விருப்ப மாறுதல் பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு EMIS இணையதளத்தில் நடத்துவது தொடர்பாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் சரியாகப் பதிவு செய்வது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் செப்டம்பர் 25ஆம் தேதிக்குள் பணிகள் நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் அல்லது ஒரே பணியிடத்தில் பணிபுரிந்துவரும் அலுவலகப் பணியாளர்களுக்கு கட்டாய மாறுதலும், அதனைத் தொடர்ந்து தகுதியுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் விருப்ப மாறுதல், மாவட்ட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் ஆகியவை Google Meet வழியாக நடத்தப்பட்டுவந்தது.
அரசு பள்ளி அலுவலர்களுக்கு உத்தரவு
தற்போது அனைத்து அலுவலகப் பணியாளர்களுக்கான கட்டாய மாறுதல், விருப்ப மாறுதல், மாவட்ட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் ஆகிய அனைத்தும் EMIS இணையதளம் மூலமாக நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அரசாணை எண்.149, பள்ளிக்கல்வி (SE5(1)) துறை, நாள் 01.07.2024-ன் அடிப்படையில், அரசு பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கான பல்வேறு பணிமாற்றம் மற்றும் தொடர்புடைய பணிகள் EMIS இணையதளம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், EMIS இணையதளத்தில் பதிவாகியுள்ள பணியாளர்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், தற்போது பணிபுரிந்து வரும் பணியாளர்களின் எண்ணிக்கைக்கும், EMIS-ல் பதிவு செய்யப்பட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கைக்கும் இடையே Shortfall Entries எனப்படும் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
EMIS இணையதளத்தில் பதிவு கட்டாயம்
இதையடுத்து, EMIS இணையதளத்தில் பணியாளர்களின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவரங்கள் பதிவாகாமல் இருந்தால், புதிய பதிவுகள் மேற்கொள்ளவும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பணியாளர்கள் தற்போது பணிபுரியும் அலுவலகம் மற்றும் பள்ளியுடன் தொடர்புடைய பதிவுகள் சரியாக இருப்பதை உறுதி செய்து, தவறான அல்லது விடுபட்ட விவரங்களை உரிய முறையில் சரிசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 25 ஆம் தேதி கடைசி நாள்
செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் பணியாளர்களின் EMIS விவரங்களில் தேவையான புதிய பதிவுகள் மற்றும் திருத்தப் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில், பணியாளர்களின் EMIS பதிவுகள் மற்றும் தற்போதைய பணிப்பதிவுகள் சரியாக உள்ளதா என்பதையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அந்த அறிவிப்பில் அறிவுறுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















