Tiruvannamalai: ‘குடி’மகன்களுக்கு முக்கிய அறிவிப்பு.. திருவண்ணாமலையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் இன்று (நவம்பர் 24) விற்பனை செய்யப்படுகிறது.
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான மகா தீப திருவிழாவை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
கார்த்திகை மாதம் தொடங்கி விட்டாலே அந்த மாதத்தில் வரும் கார்த்திகை தீபம் தான் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும். பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கருதப்படுவது திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலாகும். இங்கு நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா உலக பிரசித்தி பெற்றது. நடப்பாண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா கடந்த நவம்பர் 17 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது.
நேற்று (நவம்பர் 23) மகா தேரோட்டம் நிகழ்வு நடைபெற்றது. நாளை மறுநாள் (நவம்பர் 26) கார்த்திகை தீப திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள 2,668 உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதனிடையே பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் இன்று (நவம்பர் 24) விற்பனை செய்யப்படுகிறது.
இதில் அதிகாலை 4 மணிக்கு நடைபெறும் பரணி தீபத்தை காண ரூ.500 கட்டணத்தில் 500 பேருக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட உள்ளது. இதேபோல் மாலை 6 மணிக்கு நடைபெறும் மகா தீப நிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில் ரூ.600 கட்டணத்தில் 100 பேருக்கும், ரூ.500 கட்டணத்தில் 1000 பேருக்கும் அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது. இச்சூழலில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி, தீபத்திருநாளான 26.11.2023 அன்று 2500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற நிபந்தனைகளிடன் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
பக்தர்களுக்கு நிபந்தனைகள்
மலையேறும் பக்தர்கள் www.annamalaiyar.hrce.tn.gov என்ற இணைய தளம் வாயிலாக இன்று காலை 10 மணி முதல் அனுமதிச்சீட்டு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நிபந்தனைகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, நவம்பர் 26 ஆம் தேதி காலை 05.00 மணிக்கு திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு முன்னுரிமை (First Come First Serve Basis) என்ற அடிப்படையில் வரிசைப்படி (Queue System) புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்கள் முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் மலையேற அனுமதிகப்படுவார்கள் என்றும், 26 ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் மலை ஏறும் பக்தர்கள் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதியில்லை எனவும், தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படும் நிலையில் அதனை திரும்ப கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
டாஸ்மாக் கடைகளுக்கு லீவு
இந்நிலையில் திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு அங்கு நாளை (நவம்பர் 25) முதல் 27 ஆம் தேதி வரை நகரத்திற்கு அருகில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். அதன்படிகாமராஜர் சிலை, வேங்கிக்கால் புறவழிச்சாலை, மணலூர் அருகே செயல்படும் டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபான விடுதிகள், மிலிட்டரி கேண்டீன் ஆகியவை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.