TN DGP: “முதலமைச்சரின் எண்ணமும் எங்கள் எண்ணமும் ஒன்றுதான்.. நடவடிக்கையில் இருக்கிறோம்” - டிஜிபி பேட்டி
தமிழ்நாட்டில் முன்பைவிட தற்போது சட்ட ஒழுங்கு சீராக உள்ளதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நிலவி வரும் சட்ட ஒழுங்கு சூழல் தொடர்பாகவும், தமிழ்நாடு காவல்துறை தொடர்பாகவும் டிஜிபி சைலேந்திர பாபு ஒரு பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக அவர் த இந்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் சில முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி அந்த பேட்டியின் சில கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்..
கேள்வி: சென்னையில் அதிகரித்து வரும் கொலை சம்பங்களால தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு சரியாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே. உங்களுடைய பதில் என்ன?
பதில்: சென்னையில் கொலை குற்ற சம்பவங்கள் அதிகரித்து என்று கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை. கடந்த மே மாதத்தில் 10 கொலை சம்பவங்கள் நடைபெற்றன. அவற்றில் 8 சம்பவங்களில் எந்தவிதமான முன்விரோதமும் இல்லை. மேலும் தற்போது தமிழ்நாட்டில் எந்தவித சாதி மோதல், மத கலவரம், மது குடித்து மரணம், காவல்துறை துப்பாக்கிச் சுடு போன்ற எந்தவித சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆகவே தமிழ்நாட்டில் முன்பு எப்போதும் இருந்ததைவிட தற்போது தான் சட்ட ஒழுங்கு நன்றாகவும் அமைதியாகவும் உள்ளது. இதை கடந்த வருடங்களில் நடைபெற்ற பரமக்குடி மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சுடுதல் சம்பவங்கள் மூலம் நீங்கள் நன்று அறிந்து கொள்வீர்கள்.
கேள்வி: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறதே. அதை எப்படி கையாள போகிறீர்கள்?
பதில்: பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்களை தடுப்பதே காவல்துறையின் முக்கிய பணியாக உள்ளது. அதற்கு புகார் பதிய படுவது மிகவும் முக்கியமான ஒன்று. அதில் தமிழ்நாடு காவல்துறை அதிக கவனம் செலுத்தியது. அதன்காரணமாக 2020-21 காலங்களில் பதியபட்ட பாலியல் புகார்களைவிட 2021-22ல் அதிக புகார்கள் பதியபட்டுள்ளன. மேலும் வரதட்சணை கொடுமை தொடர்பான மரணங்கள் சுமார் 50 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. காவல்துறையினர் தீவிரமாக செயல்படுவதன் காரணமாகவே தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக பதிவடப்படுகிறது. அதற்காக அது அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட முடியாது. பல சம்பவங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வர தொடங்கியுள்ளன.
கேள்வி: சென்னை, திருவண்ணாமலை போன்ற இடங்களில் லாக்கப் மரணங்கள் நடைபெற்று வருகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
பதில்: இந்த இரண்டு இடங்களில் நடைபெற்ற மரணம் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய தண்டனை வழங்கப்படும். தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 84 லாக்கப் மரணங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் 2013ல் 13 மரணங்கள், 2018ல் 17 மரணங்கள், 2019ல் 10 மரணங்கள் நடைபெற்றுள்ளன. தற்போது 2021ல் அது 4 மரணங்களாக குறைந்துள்ளது. எங்களுடைய ஒரே நோக்கம் லாக்கப் மரணங்களே நிகழ கூடாது என்பது தான். தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையும் அது தான்.
கேள்வி: குற்றசம்பவங்களை நடப்பதற்கு முன்பாக தடுப்பது மிகவும் முக்கியமான ஒன்று. அந்தவகையில் தமிழ்நாடு காவல்துறையில் முன்னேற்ற திட்டம் உள்ளதா?
பதில்: நம்முடைய தமிழ்நாட்டு முதலமைச்சரின் ஒரே எண்ணம் குற்றம் நடைபெறாத சமூகத்தை உருவாக்குவது தான். அதற்காக காவல்துறை பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. குறிப்பாக சிசிடிவி பொறுத்துவது, காவல் உதவி செயலி போன்றவற்றை செய்துள்ளது. அத்துடன் பெண்கள் பாதுகாப்பிற்காக ஜிபிஎஸ் கருவி உதவியுடன் கூடிய கருவிகளையும் பயன்படுத்தி வருகிறது. இவை தவிர இ-பீட் முறையும் தமிழ்நாடு காவல்துறை பயன்படுத்தி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்