TN School Holiday: வெளுத்து வாங்கும் கனமழை ! விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் விழுப்புரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் இரவு நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது கனமழையின் காரணமாக விழுப்புரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
அரபிக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம், விக்கிரவாண்டி, மயிலம்,திண்டிவனம் ,செஞ்சி, வளவனூர் மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் நண்பகல் வரை மழை பெய்தது. மாலை நேரத்தில் ஓய்ந்திருந்த மழை இரவு நேரத்தில் கன மழையாக கொட்டி தீர்த்தது. மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதில் சிரமத்திற்கு உள்ளாகினர். வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தவாறே முகப்பு விளக்குகளை எறியவிட்டப்படி சென்றனர். கனமழையின் காரணமாக சாலைகளின் ஓரங்களில் மழை நீர் ஓடியது.
கனமழையின் காரணமாக 22.10.2025 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடுர் அணையின் நீர்மட்டம் 30 அடியாக உயர்ந்துள்ளது.
விடுமுறை அறிவிப்பு!
கன மழை காரணமாக தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்டோபர் 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் உருவாகிறதா? - வானிலை மையம் எச்சரிக்கை:
மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மதியம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழக - புதுவை தெற்கு ஆந்திர கடலாரப்பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது, அடுத்த 24 மணி நேரத்தில், மேலும் மேற்கு-வடமேற்கு திசையில், வடதமிழக புதுவை தெற்கு ஆந்திர கடலாரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து, மேலும் இது வலுவடையக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















