மீண்டும் ஒரு தமிழர்! தமிழ்நாட்டின் 50வது தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம் - யார் இவர்?
தமிழ்நாட்டின் புதிய மற்றும் 50வது தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளராக பொறுப்பு வகித்த சிவ்தாஸ் மீனா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாட்டின் 50வது தலைமைச் செயலாளர் ஆவார்.
50வது தலைமைச் செயலாளர்:
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த சிவ்தாஸ் மீனாவை தமிழக அரசு நேற்று கட்டிட மனை ( ரியல் எஸ்டேட்) ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமித்தது. இதையடுத்து, தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
முருகானந்தமே அந்த பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாட்டின் 50வது தலைமைச் செயலாளர் ஆவார்.
யார் இந்த முருகானந்தம் ஐ.ஏ.எஸ்.?
முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த இவர், தற்போது தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் இவர் பட்டம் பெற்றுள்ளார். பின்னர், இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.எம். (லக்னோ) கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார்.
1991ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வானார். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பல மாவட்டங்களில் பணியாற்றி இவர், மிகுந்த திறமையும், அனுபவமும் கொண்டவர். கொரோனா காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்போது, விழுப்புரம் மாவட்டத்திற்கு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட முருகானந்தம் ஐ.ஏ.எஸ்., அந்த மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் பேரிடர் பணிகளை திறம்பட கையாண்டவர்.
மீண்டும் ஒரு தமிழர்:
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் தொழிற்துறை முதன்மை செயலாளராக பொறுப்பு வகித்தார். எம்.பி.ஏ. பட்டதாரியும், மிகுந்த அனுபவமும் கொண்டவரான இவர் தி.மு.க. ஆட்சியில் நிதித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2021ம் ஆண்டு இவர் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றார்.
தி.மு.க. அரசின் முதல் நிதிநிலை அறிக்கை தயாரிப்பில் திறம்பட பணியாற்றியதற்காக இவரை அப்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பாராட்டினார். உதய்சந்திரனுக்கு பதிலாக முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்ட இவர் தற்போது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்க உள்ளார். மு,க,ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தி.மு.க. ஆட்சியில் இறையன்புக்கு பிறகு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது தமிழர் இவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.