NEET | ”இந்த நிமிடம்வரை நடைமுறையில் இருக்கும் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கிடைக்கும் வரை நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது என்பதே உண்மை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.
“நீட் தேர்வு பயிற்சி மையத்தை உருவாக்கியது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்தான். அரசுப்பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி என அறிவித்து, அதற்கான பயிற்சி மையத்தை செயல்படுத்திக்கொண்டிருப்பது ஆட்சியாளர்கள்தான். இந்த நிலையில், ஏதோ தி.மு.க. அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி மையம் அமைத்துச் செயல்படுத்துவது அவருக்கு குழப்பம் ஏற்படுத்துவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
குழப்பத்துக்கு அவசியமே இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்தது. அ.தி.மு.க. ஆட்சியில்தான் நீட் தேர்வுக்கான பயிற்சி, அரசுப்பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி மையம் வந்தது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே அவர் எடுத்துச்சொன்ன நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோருவோம் என்று அறிவித்த அடிப்படையில் பிரதமருக்கு அது சம்பந்தமாக கடிதம் எழுதினார்.
அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் இந்த தேர்வு வராமல் இருப்பதற்கான முதல்படியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளார். அந்த குழு அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு ஒரு மாதம் என அறிவிக்கப்பட்டு, இதுவரை தினமும் கூட்டம் நடத்தி வருகிறார். 4 கூட்டம் நடந்துள்ளது. முறையாக, நீட் தேர்வில் இருந்தும் தமிழகம் விலக்கு பெறும் வகையில் நீதிபதி தலைமையிலான குழு மேல் நடவடிக்கைகள் என்கிற அளவில் இந்த நடவடிக்கைகள் நடந்துகொண்டுள்ளன.
டெல்லியில் பிரதமரைச் சந்தித்த முதல்வர், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரியுள்ளார். பிரதமரும் அதை கனிவுடன் பரிசீலிப்பதாக தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். இதன்மூலம் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. ஆனால், எதிர்க்கட்சித்துணைத் தலைவர் இப்போதுதான் நீட் தேர்வு வந்ததுபோல அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2017ல் அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை, குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தார். மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காததால் திருப்பி அனுப்பியது. அப்போதெல்லாம் எதிர்க்கட்சித்துணைத் தலைவர் எதுவுமே பேசவில்லை.
தி.மு.க. நீட் தேர்வில் விலக்கு என்ற அடிப்படையில் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிமிடம் வரை நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது. அதற்காக மாணவர்கள் தயாராகும் சூழல் உள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படவேண்டும் என்பது தி.மு.க. அரசின் நிலைப்பாடு. ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் பரிந்துரை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். எனவே, நீட் தேர்வுக்கான விதிவிலக்கு வரும் வரை நீட் தேர்வு இருக்கிறது என்பதுதான் உண்மை” என்று கூறியுள்ளார்.