TN Weather: மாறி வரும் பருவநிலை.. நாளை முதல் வறண்ட வானிலையே இருக்கும்.. இன்றைய நிலவரம் என்ன?
நாளை முதல் தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று, தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதேபோல் 4 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த சில தினங்களாக வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக சென்னையில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. ஆனால் நாளை முதல் வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை அண்ணா நகர், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மாறாக பனிப்பொழிவு இல்லாமல் வறண்ட வானிலையே இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் அவ்வப்போது லேசான மழை பதிவாகி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்) தலா 2, கோடநாடு (நீலகிரி) 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.