TN Corona Lockdown: வெளியே போகாதீங்க மக்களே.. முழு ஊரடங்கில் எவையெல்லாம் இயங்கும்; எவையெல்லாம் இயங்காது?
தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது
கொரோனா வைரஸின் மூன்றாவது அலை உலக நாடுகளை சிறை பிடிக்க ஆரம்பித்துள்ளது. கொரோனா மட்டுமின்றி உருமாற்றமடைந்த ஒமிக்ரான் வைரஸும் பரவுவதால் மக்கள் அச்சத்தின் உச்சத்தில் இருக்கின்றனர். இதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும், முகக்கவசத்தை மறக்காமல் அணிய வேண்டும் போன்ற பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய, மாநில சுகாதாரத் துறை அமைச்சகங்கள் தெரிவித்துவருகின்றன.
இந்தியாவில் நாளொன்றுக்கு ஒரு லட்சமாக தற்போது கொரோனா பாதிப்பு பதிவாகிவருகிறது. தமிழ்நாட்டிலும் அதன் வேகம் அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் ஏறத்தாழ11,000 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 5,098 பேருக்கு தொற்று பரவியுள்ளது.
இதற்கிடையே தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தினமும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு விதிக்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 6ஆம் தேதியிலிருந்து இரவு 10 மணியிலிருந்து அதிகாலை ஐந்து மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இன்று காலை ஐந்து மணிக்கு அமலுக்கு வந்த ஊரடங்கானது நாளை காலை ஐந்து மணிவரை அமலில் இருக்கும்.
என்னென்ன கட்டுப்பாடுகள்:
இன்று காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படாது. மதுபான கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் மின்சார ரயில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஹோட்டல்களில் பார்சல் சேவைக்கு உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயணத்தின்போது காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தால் அப்போது பயணச்சீட்டை காண்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் திருமண நிகழ்ச்சிகள் செல்பவர்கள் திருமண அழைப்பிதழ் வைத்திருந்தால் அவர்களை அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அதிகபட்சமாக 500 ரூபாய்வரை அபராதம் விதிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் தமிழ்நாடு முழுவதும் 60,000 காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 10,000 காவல் துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சென்னை நகரில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறை சொல்வது என்ன?
முழு ஊரடங்கான இன்று அத்தியாவசிய தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று காவல் துறை சார்பில் வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அத்தியாவசிய பணியாளர்கள், தொழிற்சாலை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் அடையாள அட்டையை பார்வையிட்டு அனுமதிக்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச்செல்லும் வாகனங்களை எந்த காரணத்தை கொண்டும் தடுக்கக்கூடாது. வாகன சோதனையின்போது வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனிதநேயத்துடனும் காவல் துறையினர் நடந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்