Police Drone Unit: இனி திருட்டுச் சம்பவங்கள் கண்காணிப்பு இப்படித்தான்! - இந்தியாவில் முதல் முறையாக தொடங்கிய போலீஸ் ட்ரோன் யூனிட்..
செயற்கை நுண்ணறிவால் செயல்படும் போலீஸ் ட்ரோன் யூனிட்டை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு காவல்துறையின் ட்ரோன் போலீஸ் பிரிவை, டிஜி,பி சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார்.
இது தொடர்பான செய்தி வெளியீட்டில், “ தமிழக முதல்வரின் தொலைநோக்கு திட்டங்களில் மற்றுமொரு மைல் கல்லாக நமது வானேவி காவல் அலகு இந்தியாவிலேயே ஒரு முன்னோடி திட்டமாக தமிழகத்தில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இத்திட்டம் சுமார் 3.6 கோடி மதிப்பில் உருவாகியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள வானேவிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டவையாக இருப்பது மற்றும் ஒரு சிறப்பு. இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட வானேவிகள், வானேவி காவல் அலகில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த வானேவிகளை ஐந்து கிலோ மீட்டர் தொலைவு வரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொண்டே இயக்க முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.
இவ்வகை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட வானேவிகள் மூலம் மிகத் துல்லியமாக பண்டிகை மற்றும் கூட்டங்கள் நிறைந்த நிகழ்வுகளில் கூட்டத்தின் அளவை நிர்ணயிக்கவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உத்திகளை மேற்கொள்ளவும் இயலும். பகல் மற்றும் இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டத்தையும், திருட்டு கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரையும் வானத்திலிருந்து வானேவிகள் மூலம் கண்காணித்து விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க முடியும்.
தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், முன்னிலையில் இன்று (29.06.2023) அடையாரில் உள்ள. அருணாசலபுரம். முத்து லட்சுமி பார்க் அருகே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள "வானேவி காவல் அலகை" (DRONE POLICE UNIT) துவக்கி வைத்தார்.
சாலையில் செல்லும் வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாக கண்காணித்து குற்றத்தில் ஈடுபடும் வாகனங்களை வகைப்படுத்தி தக்க நடவடிக்கைகளை எடுக்க முடியும். இது மட்டும் இல்லாமல் செயற்கை நுண்ணறிவைக் (AI) கொண்ட இந்த வானேவிகளை பயன்படுத்தி குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறை சிறப்பாக செயலாற்றிட முடியும்.
கடற்கரையில் நிகழும் அலைகளின் சுழல்களில் சிக்கிக் கொள்வது போன்ற எதிர்பாராத நிகழ்வுகளை துல்லியமாகக் கண்காணித்து உயிர் காக்கும் உபகரணங்களை உடனே வானேவிகள் வழியே வான் மூலம் விரைந்து வழங்கி உயிர் போகும் அசம்பாவிதங்களை தடுத்துவிட முடியும்.
மேலும், சென்னையின் பிரதான * சாலைகளிலும் இதர இணைப்பு சாலைகளிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களைக் கண்காணித்து. உடனடியாகத் நெரிசலுக்கான காரணங்களை கண்டறிந்து போக்குவரத்தை சீர் செய்ய இயலும். இத்தகைய வானேவி காவல் அலகை தமிழக காவல்துறை இந்தியாவிற்கே வழிகாட்டும் திட்டமாகவும் காவல்துறையின் நவீனமயமாக்குதலில் மற்றுமொறு மைல் கல்லாகவும் செயலாக்கத்திற்கு கொண்டு வருவது இதுவே முதல் முறை” என குற்பிடப்பட்டுள்ளது.