
Senthil Balaji Hospitalized: திடீர் உடல்நலக்குறைவு.. வீல் சேரில் அழைத்து வரப்பட்ட செந்தில் பாலாஜி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பணமோசடி செய்ததாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர். அதனை தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கால்வலி காரணமாக இன்று காலை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைதுறை பிரிவு வார்டில் அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் சட்டவிரோதமாக பணப்பரிவர்தனை செய்ததாக அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். அதன் பின் அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. இதற்கிடையே அவரது கைது சட்டவிரோதமானது என கூறி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல் செந்தில் பாலாஜி மனைவி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். ஆனால் அதிலும் செந்தில் பாலாஜிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதற்கிடையில், செந்தில் பாலாஜிக்கு நெஞ்சி வலி ஏற்பட்டு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஒரு மாத காலம் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதனிடையே நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவித்து வரும் செந்தில் பாலாஜி பிணைக் கோரி மனு தாக்கல் செய்தார். முதலில் இந்த பிணை மனு எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் இந்த மனு உயர்நீதிமன்றம் தான் விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டது. பின் உயர்நீதிமன்றத்தில், எந்த அமர்வு விசாரிக்கும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பிணை மனு மீதான விசாரணை சென்னை முதன்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையில், அமலாக்கத்துறை தரப்புக்கும் செந்தில் பாலாஜி தரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. ஆனால் இறுதியில் ஜாமீன் அளிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரிக்கையின்போது "அமலாக்கபிரிவு கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவர்கள் நடத்திய விசாரணையின் மூலம் கிடைத்தது அல்ல. மத்திய குற்றப்பிரிவில் இருந்து பெறப்பட்டது. 1.34 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்த நிலையில், செந்தில் பாலாஜியின் வருமான வரி கணக்கை பார்த்தால் உண்மை தெரியும். பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார். உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும்" என செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது.
ஜாமீன் அளிக்க மறுத்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. இதனால் வரும் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் விசாரிக்கப்படவுள்ளார். இதன் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 7வது முறையாக நீதிமன்றக் காவல் நீடித்து சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜி முன்னதாக நெஞ்சு வழி காரணமாக ஆஞ்சியோ செய்ததால் , கால் வீக்கம் ஏற்படுவது இயல்பு , கால் அடிக்கடி மரத்த காரணத்தினால் அமைச்சர் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லும் படி கேட்டுக் கொண்டதால் அவருக்கு உணவு அருந்துவதற்கு முன்னதாகவம் பின்னும் மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டது. கால்வலி காரணமாக அவர் நடக்கமுடியாமல் வீல் சேரில் அழைத்து வரப்பட்டார். ரத்த அழுத்தம் பரிசோதனை , ஈ சி ஜி , மற்றும் இதர பரிசோதனைகள் முடிந்த பின்னர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மீண்டும் அழைத்து செல்லப்பட உள்ளதாக அவரின் வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

