Sani Peyarchi 2023: இன்று சனிப்பெயர்ச்சி! மகர ராசியில் இருந்து கும்பத்துக்கு செல்லும் சனி பகவான்! திருநள்ளாறில் குவியும் பக்தர்கள்
Sani Peyarchi 2023: இன்று சனிப்பெயர்ச்சி நிகழ்வு நடைபெறுகிறது. மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்க உள்ளார்.
சனிப்பெயர்ச்சி(Sani Peyarchi) விழாவை முன்னிட்டு திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரன் கோயிலில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சனிப்பெயர்ச்சி(Sani Peyarchi):
பொதுவாக ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்தல் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. எல்லா கிரகங்களுக்கும் பெயர்ச்சி உள்ளது என்ற போதிலும், சனிப்பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி முக்கியமானதாக கருதப்படுகிறது. சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால், ஒவ்வொரு ராசியில் இருந்து இடம் பெயர இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதைத் தான் சனிப்பெயர்ச்சி என்கிறோம்.
இந்த நிலையில் இன்று சனிப்பெயர்ச்சி நிகழ்வு நடைபெறுகிறது. மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்க உள்ளார். இந்த சனிப்பெயர்ச்சியானது காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெறும். சனிப்பெயர்ச்சி நிகழ்வு நடக்கும் போது சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள், அஷ்டோத்திர அர்ச்சனை, சகஸ்கர நாம அர்ச்சனை, தீப வழிபாடு உள்ளிட்டவை நடைபெற உள்ளது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்:
இதனால் திருநள்ளாறுக்கு வெளியூரில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். லட்சகணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும் தரிசனம் செய்வதற்காக ஏதுவாக ரூ.1,000, ரூ.600, ரூ.300 என விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சிறப்பு அபிஷேகம் ரூ.500, சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ.300, சிறப்பு தில சூரண நைவேத்ய அர்ச்சனை ரூ.300 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநள்ளாறுக்கு சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசின் கும்பகோணம் போக்குவரத்து கோட்டம் சார்பில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் காரைக்கால் ரயில் நிலையம், பேருந்து நிலையம், சந்தை திடல், செல்லூர் விஐபி நகர், பஜன்கோ வேளாண் கல்லூரி உள்ளிட்ட முக்கிய ஈடங்களில் இருந்து 20 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நாள் முழுதும் நடை திறப்பு:
திருநள்ளாறு கோயிலை சுற்றி 1400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில் வளாகம் மட்டுமல்லாமல் நகரின் முக்கிய பகுதிகள் கண்காணிப்பு கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பக்தர்கள் எவ்வித சிரமுமின்றி சாமி தரிசனம் செய்ய நாள் முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Karungali Malai: கருங்காலி மாலையில் பயன்கள் இவ்வளவா? யார் அணியலாம்? அணியக் கூடாது? முழு விவரம்