ஆவினில் விரைவில் நாட்டு பசும்பால் விற்பனை - அமைச்சர் ஆவடி நாசர் தகவல்
1 லிட்டர் பாலை கால்நடை விவசாயிகளிடம் இருந்து 32 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்
தமிழ்நாடு அரசின் ஆவின் பால் மூலம் நாட்டு பசுவின் பால் விற்பனைக்கு செய்ய இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் பால் விலையை 3 ரூபாய் குறைத்து கையெழுத்திட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அன்றிலிருந்து இன்று வரை ஆவின் நிறுவனத்தில் பல்வேறு மாறுதல்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஆவடி நாசர், புதிது புதிதாக பல விசயங்களை அறிமுகம் செய்து வருகிறார்.
அதே போல், அதிமுக ஆட்சியில் ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது பால்வளத்துறையில் நடந்த முறைகேடுகள், ஆவின் பணி நியமனத்தில் நடைபெற்ற மோசடிகளை கண்டறிந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் நாசர். அதன் மூலம் லஞ்சம் கொடுத்து முறைகேடாக பணியில் சேர்ந்தவர்கள் நீக்கப்பட்டு முறைபடி தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆவின் நிறுவனத்தில் பால் விற்பனை மட்டுமின்றி இனிப்பு வகைகள், பால்கோவா, நெய், வெண்ணெய் போன்ற பால்சார்ந்த பொருட்களும், குல்பி போன்ற ஐஸ்கிரீம் வகைகளும், ஆவின் பூத்களில் சூடான பாதாம் பாலும் கடந்த சில ஆண்டுகளாக கிடைத்து வருகின்றன. மற்ற பால் நிறுவனங்களை விட, ஆவின் விலை குறைவாகவும், தரமாகவும் இருப்பதால் பலரும் அதை வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுவை மிகுந்த சிறப்பு இனிப்பு வகைகளை விற்பனைக்காக அறிமுகப்படுத்தினார் பால்வளத்துறை அமைச்சர் நாசர். காஜு கட்லி, ஜாங்கிரி, லட்டு, பால் பேடா, பால் கோவா போன்ற இனிப்பு பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்பு இனிப்பு பெட்டியையும் அமைச்சர் அறிமுகம் செய்தார்.
ஆவினில் புதிதாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இனிப்பு வகைகள்:
காஜூ கட்லி 250 கிராம் - ரூ.225
நட்டி மில்க் கேக் 250 கிராம் - ரூ.210
ஸட்ஃப்டு மோதி பாக் 250 கிராம் - ரூ.170
காஜூ பிஸ்தா ரோல் 250 கிராம் - ரூ.275
காபி மில்க் பர்ஃபி 250 கிராம் - ரூ.210
வகைப்படுத்தப்பட்ட இனிப்புகள் - 500 கிராம் - ரூ.425
இதனை அறிமுகம் செய்துவிட்டு பேசிய ஆவடி நாசர், ”இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 25 டன் இனிப்புகளை விற்க வேண்டும் என இலக்கு நிர்ணயத்து ரூ.2.5 கோடி மதிப்பில் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
மேலும் 1 லிட்டர் பாலை கால்நடை விவசாயிகளிடம் இருந்து 32 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக தெரிவித்த அவர், தமிழ்நாடு அரசின் ஆவின் பால் மூலம் நாட்டு பசுவின் பால் விற்பனைக்கு செய்ய இருப்பதாக கூறியுள்ளார். ஆவின் நிறுவனத்தில் ஏற்படும் நஷ்டத்தை குறைக்க, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க உள்ளதாகவும், இந்த ஆண்டு ஆவிம் இனிப்பு வகைகள் அதிக நுகர்வோரை சென்றடையும் வகையில் சில மாற்றங்களுடன் தயாரித்து 50% விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
பேக்கரியில் கிடைப்பதை விட ஆவினில் இந்த இனிப்பு வகைகளில் விலை மலிவாகவும், தரமாகவும் இருப்பதால் இந்த தீபாவளியை மக்கள் ஆவினுடன் கொண்டாட தயாராகி வருகின்றனர்.