Reservation : 10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான மறுசீராய்வு மனு - அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு
10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இதற்கு தமிழ்நாட்டில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், அதிமுக மற்றும் பாஜகவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
பொன்முடி :
ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, 10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, மறுசீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்ய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். தமிழகத்தில் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படமாட்டாது எனவும், கூட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டாலும், மறுசீராய்வு மனுவிற்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும் என நம்புவதாகவும் பொன்முடி தெரிவித்தார்.
வைகோ :
தொடர்ந்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தந்தை பெரியாருடைய கருத்தை ஏற்றுத்தான் நேருவும், அம்பேத்கரும் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதை நிராகரித்தார்கள் என தெரிவித்தார்.
முத்தரசன் :
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான தொடக்கம் தான் 10% இடஒதுக்கீடு எனவும், அதை எதிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
செல்வப்பெருந்தகை :
தொடர்ந்து, தேசிய கண்ணோட்டத்தில் காங்கிரஸ் பார்வை வேறாக இருந்தாலும், தமிழ்நாட்டை பொருத்தவரை சமூகநீதி கோட்பாட்டின் அடிப்படையில், மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய ஆதரிப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை தெரிவித்தார்.
திருமாவளவன் :
தொடர்ந்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி, பிரிவினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்த வேண்டும் என்றார். இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களிடையே கருத்தொற்றுமை ஏற்படுத்தும் வகையில், கலந்தாய்வு கூட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு சார்பில் முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
பாலு :
மூன்றாவது இடஒதுக்கீட்டு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையில், தமிழகம் இருப்பதாக சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பாமகவின் சட்டமன்ற உறுப்பினர் பாலு தெரிவித்தார்.
முன்னதாக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் 103-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் எனப்படுவது - இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் சமூகநீதித் தத்துவத்துக்கு முரணானது என்பதாலும், உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக இருப்பதாலும், ஏழைகளில் சாதிப் பிரிவினையைக் கற்பித்துப் பாகுபாடு காட்டுவதாக இருப்பதாலும், அதனை நிராகரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்போது, தமிழ்நாடு அரசும் உரிய முறையில் சமூகநீதியினையும், சமத்துவத்தையும் நிலைநாட்டிடும் வகையில் தனது கருத்துகளை வலுவாகப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.