கரூர் : பெற்றோர் திட்டியதால் வீட்டைவிட்டு வெளியேறிய குழந்தைகள், வாட்ஸ்அப் உதவியுடன் மீட்பு..!
கரூரில் காணாமல்போன நான்கு குழந்தைகள் ( வாட்ஸ்அப் உதவியுடன் ) சமூக வலைத்தளங்கள் மூலமாக பகிரப்பட்டு வைரலான செய்தியின் காரணமாக போலீசாரால் மீட்கப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது
கரூர், வெங்கமேடு ரொட்டிகடை தெருவைச் சேர்ந்த மனோகரன் - ரோகினி தம்பதியினரின் இரு குழந்தைகள் சிவராஜ் (9) சிவானி வயது 3 மற்றும் அதே தெருவை சேர்ந்த சண்முகராஜா - கார்த்திகா தம்பதியினரின் இரு குழந்தைகள் ஆறாம் வகுப்பு படிக்கும் முகுந்தன் வயது (9) ஒன்றாம் வகுப்பு படிக்கும் தேஜன் (6) ஆகிய 4 பேரும் பெற்றோர்களை தொந்தரவு செய்து கொண்டிருந்ததால் பெற்றோர்கள் அவர்களை கண்டித்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த நான்கு பேரும் கூடிப்பேசி முடிவெடுத்த பின்னர் பெற்றோர்கள் மீது கோபித்துக்கொண்டு நேற்று மதியம் 1 மணி அளவில் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டனர்.
சிறிது நேரத்தில் பெற்றோர்கள் விளையாடச் சென்றவர்கள் காணவில்லை என நீண்ட நேரம் தேடி உள்ளனர். உடனே அக்கம்பக்கத்தினர் தொலைந்து போன குழந்தைகளின் படங்களை காணவில்லை என பெற்றோர்கள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்பட்டன. உடனே பல்வேறு தரப்பு வாட்ஸ்அப் குழுக்களிலும், கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு குழுக்களிலும் குழந்தையின் புகைப்படம் வைரலானது.
இதனிடையில், கரூர் ரயில் நிலையத்தில் நான்கு குழந்தைகளும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்ததை, ரயில்வே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சக்திவேல், வீரமணி, சேகர், குழந்தைவேல் ஆகியோர் பார்த்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது பெற்றோருக்கு உதவி இன்றி நீங்கள் எவ்வாறு ரயில் நிலையம் வந்தீர்கள் என்று விசாரித்தபோது குழந்தைகள் நடந்த நிகழ்வை கூறியுள்ளனர். உடனே திகைத்துப்போன போலீசார், சிறுவயதில் தங்களுக்கு இப்படிப்பட்ட யோசனை எப்படி வந்தது, இது எல்லாம் தவறு என குழந்தைகளுக்கு அறிவுரை கூறினர்.
இதனிடையில் குழந்தை காணவில்லை என்ற வாட்ஸ்அப் தகவல் மாவட்டம் முழுவதும் தீயாய் பரவத் தொடங்கிய நிலையில் அங்கு கூடியிருந்த ஒரு சிலர் வாட்ஸ் ஆப்பிலும் இந்த தகவல் பதிவாகியுள்ளது. உடனே அந்த பதிவினை பார்த்த அங்கிருந்த இளைஞர்கள் போலீசாரிடம், இவர்களின் முகவரியை தெரிவிக்க உடனே போலீசாரும் அங்கிருந்து அலைபேசி மூலம் பெற்றோர்களிடம் குழந்தைகள் பத்திரமாக உள்ளதாக தகவல் அளித்தனர்.
தகவல் கிடைத்தவுடன் துடிதுடித்துப் போன பெற்றோர்கள் ரயில் நிலையம் விரைந்தனர். குழந்தைகளை பார்த்தவுடன் கதறி அழுத பெற்றோர்கள் போலீசார் அவர்களுக்கு குழந்தைகள் மனநிலை பற்றி எடுத்துக் கூறிய பின்னர் பெற்றோரிடம் போலீசார் குழந்தையை ஒப்படைத்தனர். கரூர் மாவட்டத்தில் சமூக வலைத்தளங்கள் உதவியால் வீட்டை விட்டு வெளியேறிய குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் வீடு திரும்பிய நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பின்னர் நிகழ்வு குறித்து வெங்கமேடு போலீஸாருக்கு தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் குழந்தையின் பெற்றோரிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
தற்போது உள்ள சூழ்நிலையில் சமூக வலைதளங்கள் நல்லதா கெட்டதா என பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தொலைந்த குழந்தைகளை விரைவாக மீட்க பெரிதும் உதவியாக இருந்த சமூக வலைதளங்களுக்கு நான்கு குழந்தைகளையும் தேடி அலைந்த பெற்றோர்கள் சமூகவலைதள பயன்பாட்டாளர்களுக்கு நன்றி கூறினர். சமூக வலைதளங்களை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதே தற்போதுள்ள சூழ்நிலையில் முக்கியமான ஒன்றாகும்.