ADMK Manaadu: ”ஏதோ கொஞ்சமா சாப்பாடு சிதறிடுச்சு, பாத்திரம் எடுக்குறப்ப கொட்டிட்டாங்க” - மதுரை மாநாடு குறித்து ஆர்.பி. உதயகுமார் விளக்கம்
அதிமுகவின் மதுரை மாநாட்டில் அதிகப்படியான உணவு வீண் ஆனது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கமளித்துள்ளார்.
அதிமுகவின் மதுரை மாநாட்டில் அதிகப்படியான உணவு வீண் ஆனது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கமளித்துள்ளார்.
அதிமுக மாநாடு:
அதிமுக சார்பில் கடந்த 20ம் தேதி பிரமாண்ட மாநாடு நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், 3 வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதுகுறித்து பேசியிருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மாநாட்டில் கொடுக்கப்படும் உணவுகள், வகை வகையாக இல்லாவிட்டாலும் சுவையாக இருக்கும். மக்கள் வியந்து போகும், அளவிற்கு சாப்பாடு சுவையாக இருக்கும் என பேசியிருந்தார்.
வீண் ஆன உணவு:
மாநாட்டில் பங்கேற்க வந்த தொண்டர்களுக்கு முந்தைய நாள் இரவே புளியோதரை உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மாநாட்டின் போது விநியோகிக்கப்பட்ட இந்த உணவு நன்றாக இல்லை என பலரும் குற்றம்சாட்டினர். அதோடு, மாநாட்டிற்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் நண்பகலுக்கு மேல் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கிவிட்டனர். இதனால், அவர்களுக்காக தயாரிக்கப்பட்ட புளியோதரை அண்டா அண்டாவாக மிச்சமானது. இதனால் மாநாட்டு திடலில் மலை குவியலாக கொட்டப்பட்டு இருந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களை பெற்றன.
ஆர்.பி. உதயகுமார் விளக்கம்:
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மாநாட்டில் உணவு வீண் ஆனது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஆர்.பி. உதயகுமார் “பிரமாண்டமாக நடைபெற்ற மாநாடு வெற்றி பெற்ற நிலையில் மிச்சமான உணவு கீழே கொட்டப்பட்டதை ஊடகங்கள் பெரிது படுத்தியுள்ளன. காவல்துறையினர் முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை. பல லட்சம் மக்களுக்கு உணவு தயார் செய்யப்பட்டது. மாநாட்டிற்கான உணவு பார்த்து பார்த்து செய்யப்பட்டது. அதிமுக மாநாடு வெற்றியை உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கரும்புள்ளி போல உணவு வீணாகி விட்டது. பல லட்சம் பேருக்கு உணவு சமைக்கப்பட்டது. பாத்திரங்களை எடுத்துச்செல்லும் போது உணவை கீழே கொட்டி விட்டு செல்கின்றனர். அது ஆங்காங்கே சிதறி கிடப்பதை எடுத்துக்காட்டி மிகைப்படுத்துகின்றனர். திருமண வீடுகள், விஷேச வீடுகளில் நம்முடைய உறவினர்களுக்கு உணவு பரிமாறுவதே சவாலான விசயம். பல லட்சம் பேர் பங்கேற்ற மாநாட்டில் இப்படி நடைபெறுவது இயல்புதான். எங்கேயோ சில இடங்களில் புளியோதரை சிந்தி கிடந்ததை மிகைப்படுத்தி காட்டுகின்றனர். 1 லட்சத்து 10 ஆயிரம் கிலோவிற்கு மேல் உணவு சமைக்கப்பட்டது. எல்லோரும் வந்து உணவு சாப்பிட்டனர். இந்த சூழ்ச்சிகள், அவதூறுகள் எல்லாம் எடுபடாது. மாநாடு வெற்றியை குறை சொல்ல முடியாமல் புளியோதரை தோல்வியை மிகைப்படுத்தி காட்டுகின்றனர். 3 இடங்களில் உணவுக்கூடம் அமைக்கப்பட்டது. 750 அடுப்புகளில் உணவு சமைக்கப்பட்டது. அதில் ஒரு இடத்தில் அவசர கதியில் உணவு கொடுத்திருக்கலாம். அதை போய் மிகைப்படுத்தி விட்டனர். இது எப்படி இருக்கிறது என்றால் உலகமே பாராட்டும் போது ஒரு ஓரத்தில் அமர்ந்து ஒப்பாரி வைப்பது போல இருக்கிறது” என ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.