"அசிங்கமான பிரிவினைவாத அரசியல்" - மத்திய அமைச்சர் ஷோபாவை சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெங்களூரில் நடந்த ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக போலீஸ் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அமைச்சருக்கு கண்டனம்:
இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லேஜே ”தமிழ்நாட்டில் இருந்து இங்கு வருகிறார்கள். அவர்கள் இங்கு குண்டுகள் தயாரிக்க பயிற்சி அளிக்கின்றனர்” என்று பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளார். மத்திய அமைச்சரின் இந்த குற்றச்சாட்டுக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஷோபாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள கண்டனத்தில், “பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்தியுள்ள ஒன்றிய பா.ஜ.க. இணையமைச்சர் ஷோபா கரந்த்லஜே அவர்களின் பொறுப்பற்ற பேச்சுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிளவுவாத பேச்சு:
இவ்வாறு பேசுவதற்கு அவர் ஒன்று, என்.ஐ.ஏ அதிகாரியாக இருக்கவேண்டும், அல்லது இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்வுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருக்க வேண்டும். கண்டிப்பாக இப்படி பேச அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. தமிழர்களோடு கன்னடர்களும் பா.ஜ.க.வின் இந்த பிளவுவாதப் பேச்சை நிராகரிப்பார்கள்.
நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவித்ததற்காக ஷோபா மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறேன். பிரதமரில் இருந்து தொண்டர்கள் வரை பா.ஜ.க.வில் இருக்கும் அனைவரும் இத்தகைய அசிங்கமான, பிரிவினை அரசியலை உடனே நிறுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் ஷோபாவின் வெறுப்புப் பேச்சைக் கவனித்து அவர் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் லட்சக்கணக்கான தமிழர்கள் வசிக்கின்றனர். வேலை, கல்விக்காக மட்டுமின்றி பெங்களூரிலே நிரந்தரமாக குடியேறிய தமிழர்களும் உள்ளனர். பல காலமாகமாக அமைதியான முறையில் பெங்களூரில் தமிழர்களும், கன்னடர்களும் வசித்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் குறிப்பாக சென்னையிலும் ஆயிரக்கணக்கான கன்னடர்கள் வசித்து வருகின்றனர்.
இரு மாநிலங்களிலும் அமைதியான முறையில் தமிழர்களும், கன்னடர்களும் வசித்து வரும் சூழலில் மத்திய அமைச்சர் இரு மாநில அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பிற்கு தமிழர்கள் காரணம் என்று பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Lok Sabha Election: பிரதமர் ரோட் ஷோவில் பள்ளி மாணவர்கள் விவகாரம்; தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார்!
மேலும் படிக்க: Lok Sabha Elections: "நாங்கள் பொறுப்பல்ல" - பா.ஜ.க.வுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த குமாரசாமி - கர்நாடகாவில் நடந்தது என்ன?