புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராஜினாமா? பாஜக சதுரங்க வியூகமா? பரபரப்பு அரசியல் களம்!
சுகாதாரத்துறை இயக்குநர் நியமனத்தால் அதிருப்தி அடைந்த முதலமைச்சர் ரங்கசாமி, பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறியதால், புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

முதல்வர் ரங்கசாமி ராஜினாமா- சதுரங்க விளையட்டில் பாஜக
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றன. இதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செயல்படுகிறார். துணை நிலை ஆளுநராக கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சுகாதாரத்துறை இயக்குநர் நியமனத்தால் அதிருப்தி அடைந்த முதலமைச்சர் ரங்கசாமி, பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறியதால், புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.
புதுச்சேரியில் ஆளுனர் கைலாஷ்நாதன் முதலமைச்சர் ரங்கசாமி இடையே நிர்வாக ரீதியாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில் காலியாக உள்ள சுகாதாரத் துறை இயக்குநர் பதவிக்கு துணை இயக்குநர் அனந்த லட்சுமி பெயரை முதல்வர் ரங்கசாமி பரிந்துரை செய்துள்ளார். நேற்று மதியம், இயக்குநர் பதவிக்கு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் செவ்வேள் பெயர் வெளியானது. அதனால் அதிருப்தி அடைந்த ரங்கசாமி, சட்ட சபையில் இருந்த சபாநாயகர் செல்வத்தை அழைத்து பேசினார்.
எதற்கு இந்த முதல்வர் பதவி!
'நான் அனுப்பிய பட்டியலை புறக்கணித்து ஆளுநர் தன்னிச்சையாக நியமனம் செய்வதற்கு நான் எதற்கு, ஒரு இயக்குநர் பதவி கூட போட முடியாததற்கு எதற்கு இந்த முதல்வர் பதவி. உடனடியாக என்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன். இனி நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்' எனகடும் கோபமாக கூறினார்.
தொடர்ந்து, மாலையில் நடைபெற்ற ஆளுநர் விழாவை புறக்கணித்து விட்டு, ஆவேசத்துடன் தனது அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, வீட்டிற்கு சென்றார். அதிர்ச்சியடைந்த சபாநாயகர் செல்வம், முதல்வரை சமாதானப்படுத்த மாலை 5 மணிக்கு முதல்வர் வீட்டிற்கு சென்று, முதல்வர் வரும் வரை 2 மணி நேரம் காத்திருந்தார். அப்போது, இப்பிரச்னை குறித்து உள் துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நமச்சிவாயம், அவசரமாக ராஜ்நிவாசிற்கு சென்று ஆளுநரை சந்தித்து பேசினார்.
சமாதான முயற்சி தோல்வி
இரவு 7:45 மணிக்கு அமைச்சர் நமச்சிவாயம், முதல்வர் வீட்டிற்கு சென்றார். அங்கு ஏற்கனவே காத்திருந்த சபாநாயகருடன் சேர்ந்து, முதல்வரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். முதல்வர் தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என, உறுதியாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் இருவரும் இரவு 8 மணிக்கு முதல்வர் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றனர். முதல்வரை சமாதானப்படுத்த, விரைவில் டெல்லியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் புதுச்சேரிக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜினாமா செய்ய நல்ல நேரம் - ஜோதிடருக்கு அழைப்பு
முதல்வர் ரங்கசாமி சட்டசபைக்கு மதியம் 12:30 மணிக்கு வரும்போது, சுகாதாரத் துறை இயக்குனராக செவ்வேள் நியமிக்கப்பட்ட தகவல் தெரிந்துள்ளது. இதனால் கடுப்பான முதலமைச்சர், சபாநாயகர் செல்வத்திடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். பின்னர், சட்டசபையில் இருந்து புறப்பட்டு, மயிலம் கோவிலுக்கு சென்றார். மதியம் வீட்டிற்கு வந்த முதல்வர் ரங்கசாமி. மாலை வரை யாரையும் சந்திக்காமல் ஓய்வெடுத்தார். சமாதானப்படுத்த முயன்ற சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகிய இருவரையும் பேசி அனுப்பினார். அதன் பின், ராஜினாமா செய்வதற்கு நல்லநேரம் குறித்துக் கொடுக்க, தனது ஜோதிடரை இன்று காலை வீட்டிற்கு முதல்வர் ரங்கசாமி வர சொல்லி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில் பாஜக மீண்டும் அதிரகரத்தை சீண்டும் வகையில் இதுபோன்ற செயல்களை ஆளுநர் மூலமாக செய்து வருவதாக என்.ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.






















