(Source: ECI/ABP News/ABP Majha)
ரேசன் கடையில் ஒழுங்கா பொருள்கள் கொடுக்கிறதில்லையா? குறைதீர் முகாமில் புகார் அளிங்க!
பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் குறைதீர் முகாமில் தெரிவிக்கலாம்.
சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 19ஆம் தேதி (அக்டோபர்) பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் குறைதீர் முகாம்:
பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 2024 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 19.10.2024 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.
மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ரேசன் கடை தொடர்பான புகார்:
சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் கீழ் கோதுமை, அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், அயோடின் கலந்த உப்பு, மசாலாப் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
விவசாயிகளிடமிருந்து வேளாண் பொருள்களை வாங்கி, பாதுகாத்து, அதை மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. அதே நேரத்தில், ரேசன் அட்டைகளை மக்களுக்கு வழங்கி ரேசன் கடைகள் வழியாக வேளாண் பொருள்கள் செல்வதை மாநில அரசு உறுதி செய்கிறது.
தமிழ்நாட்டில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஒருவருக்கு மாதம் 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. சென்னை மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் கோதுமையின் இருப்பைப் பொறுத்து, மாதத்திற்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.