”GST வேண்டாம் என்கிற "அம்மா"வின் வெளிப்படையான நிலைப்பாட்டிற்கு எதிராக ஏன் செயல்பட்டீர்கள்?” - பி.டி.ஆர்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காத தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை முன்னாள் நிதியமைச்சர் விமர்சித்த நிலையில் அவருக்கு பதில் கொடுத்துள்ளார்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காத தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை முன்னாள் நிதியமைச்சர் விமர்சித்த நிலையில் அவருக்கு பதில் கொடுத்துள்ளார். உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கடந்த வாரம் 45-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளவில்லை. இவருக்கு பதிலாக நிதித்துறை செயலாளர் கலந்துகொண்டார். இது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ளனர்.
முன்னதாக ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் பங்கேற்காதது குறித்து முன்னாள் நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தான் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்தார். அதில், "தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகிற ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் பங்கேற்காதது வருத்தம்.. அதற்காக சொல்லப்படுகிற காரணமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பொதுமக்கள் - வணிகர்கள் - ஆகியோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் 30-க்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி கூட்டங்களில் நான் கலந்து கொண்டுள்ளேன். நான் ஒருமுறைகூட பங்கேற்காமல் இருந்தது இல்லை.. நிதியமைச்சராக தனது கடமையை செய்யாமல் இருப்பது தமிழக மக்களுக்கு துரோகம் அல்லவா? தம்பி.. பிடிஆர்.. கவனத்தில் கொள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இதற்குப் பதிலளிக்கும் வகையில் ட்விட்டரில் சில கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். அதில், "ஒன்றிய நிதியமைச்சர் மற்றும் கவுன்சிலால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நான் அனுப்பிய 14 பக்க அறிக்கையை பகிர்வதற்கு முன் சில கயவர்களின் GST கவுன்சிலின் விதிகள் பற்றிய அறியாமையை வெளிக்கொணர காத்திருந்தேன். முன்னாள் அமைச்சர் போன்ற பெரிய மீன் சிக்குமென நினைக்கவில்லை. மேலும் வேடிக்கைகளை எதிர்பார்க்கலாம். அடுத்த வேடிக்கைக்கு முன்னோட்டமாக @offiofDJக்கு 2? GST வேண்டாம் என்கிற "அம்மா"வின் வெளிப்படையான நிலைப்பாட்டிற்கு எதிராக ஏன் செயல்பட்டீர்கள்? GSTசட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு(April2017) முந்தைய மிக முக்கியமான 16/03/2017 GSTகவுன்சில் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை?" என்று பதிவிட்டுள்ளார்.
அடுத்த வேடிக்கைக்கு முன்னோட்டமாக @offiofDJக்கு 2?
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) September 22, 2021
GST வேண்டாம் என்கிற "அம்மா"வின் வெளிப்படையான நிலைப்பாட்டிற்கு எதிராக ஏன் செயல்பட்டீர்கள்?
GSTசட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு(April2017) முந்தைய மிக முக்கியமான 16/03/2017 GSTகவுன்சில் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை? https://t.co/5qifFrZvCy
உட்கட்சியிலேயே கண்டனம்..
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் போக்குக்கு உட்கட்சியிலேயே கண்டக்குரல் எழுந்துள்ளது. இது குறித்து கட்சியின் மூத்த தலைவரான டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டியில், "பிடிஆர் எளிதில் எரிச்சல் அடைகிறார். அவர் பேசுவதில் பெரும்பாலான பேச்சுக்கள் அவர் ஆத்திரமடைவதன் வெளிப்பாடாகவே உள்ளது. அவர் யாரையும் வம்புக்கு அழைப்பதில்லை, வம்புக்கு பேசுவதில்லை. ஆனால், மற்றவர்களின் பேச்சால் எளிதில் ஆத்திரமடைகிறார்.
ஓர் அரசியல்வாதியாக தன்னை அவர் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். நான் எப்போதும் அவரிடம் அதைதான் சொல்வேன். எதிரணியினர் எப்போதும் நம்மை சீண்ட முயற்சிப்பார்கள். அப்போது நாம் அதை சரியான அணுக வேண்டியதுள்ளது. ஏனென்றால், அரசியல் களம் வித்தியாசமனது. அதிகாரத்தில் இருக்கும் நாம், செயல்களில் ஈடுபட வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்ப்பார்கள், சண்டைபோட வேண்டுமென விரும்பமாட்டார்கள். இதைத்தான் நான் எப்போதும் அவருக்கு பரிந்துரைப்பேன்" என்று கூறியிருக்கிறார்