(Source: Matrize)
Porunai River civilization : ’பொருநை நதிக்கரை நாகரிகம்’ தமிழர்களை பெருமைக்கொள்ள வைக்கும் அறிவிப்பு.!
’தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘பொருநை நதி’ நாகரிகம் குறித்து வெளியிட்ட அறிவிப்பின் மூலம் தமிழர்கள் ஒவ்வொருவரையும் பெருமைக்கொள்ள செய்திருக்கிறார்’
’இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்படவேண்டும்’ தொல்லியல் ஆய்வுகள் குறித்த விவரங்களை வெளியிட்டு பெருமிதம்பொங்க சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய வார்த்தைகள் இவை.
அப்படி அவர் பேச காரணம் இருந்தது, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகள் அடங்கிய ’பொருநை ஆற்றங்கரை நாகரிகம்’ 3,200 ஆண்டுகள் பழமையானது என அமெரிக்காவின் ’பீட்டா’ ஆய்வகம் உறுதிப்படுத்தியிருந்த ஆதாரம் அவர் கையில் இருந்தது
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டில் தொல்லியல் அகழாய்வுகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வருவதை யாரும் மறுத்துவிட முடியாது. ஒவ்வொருநாளும் தனது ட்விட்டர் பக்கத்தில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அகழாய்வுகளில் கிடைக்கப்பெறும் சான்றுகளை பதிவிட்டு மகிழ்வதே அதற்கு சான்று.
பொருநை நதிக்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகள் முந்தையது என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது தமிழர்கள் ஒவ்வொருவரையும் பெருமைக்கொள்ள வைத்த தருணம்.
கொற்கை துறைமுகத்தில் 2,800 ஆண்டுகளுக்கு முன்னரே செழிப்பான வணிகம் செய்து வந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், இவற்றுகெல்லாம் மகுடம் சூட்டும் விதமாக தமிழ்நாடு தொல்லியல்துறையால் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழாய்வுகளின்போது ஆதிச்சநல்லூருக்கு அருகே, சிவகளை பறம்பு பகுதியில் வெளிப்பட்ட முதுமக்கள் தாழி ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகள் அமெரிக்க நாட்டின் மியாமி நகரில் அமைத்திருக்கும் புகழ்பெற்ற Beta Analytical Laboratory-க்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன எனவும், அதன் ஆய்வின் முடிவில் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் கி.மு.ஆயிரத்து நூற்று ஐம்பத்தைந்து என கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இதன்மூலம் ‘தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் மூவாயிரத்து இருநூறு ஆண்டுகள் முற்பட்டது என்பதை அறிவியல் பூர்வமான ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன என சொல்லி பூரிப்படைந்தார்.
அதோடு, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் கிடைத்த அரிய பொருட்களை அழகுற காட்சிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலி நகரில் நவீன வசதிகளுடன் ‘பொருநை’ அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என்றும் பேரவையிலேயே முதல்வர் அறிவித்தது வரலாற்று சிறப்பு மிக்கது.
தமிழர் நாகரிகம் எவ்வளவு தொன்மையானது என்பதை உலகிற்கு நிரூபிக்கும் வகையில் நடத்தப்படும் இதுபோன்ற ஆய்வுகளினால் தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் இந்தியாவிற்கே முன்னோடி என்பது விளங்கி வருகிறது. இப்போது ‘பொருநை’ நதி நாகரிகம் 3,200 ஆண்டுகள் முந்தையது என ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருப்பதால் ‘கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி, தமிழ் குடி என்பது’ தெள்ளத் தெளிவாகிறது.
உலகிலேயே முதன் முதலில் உருவாகிய மலை என இதிகாசங்களிலும், புராணங்களிலும் சொல்லப்படும் ‘பொதிகை’ மலையில்தான் ‘பொருநனை நதி’ என்ற தாமிரபரணி நதி தோன்றுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 2வது உயரமான மலையான பொதிகையில் இயற்கையாகவே ஓங்கி வளர்ந்த மரங்கள் இருப்பதால் மேகக்கூட்டங்களை இழுத்து வருடத்தின் பெரும்பாலான நாட்களில் மழை தருவிக்கும்படி அமையப்பெற்றிருக்கிறது. இதனாலேயே தாமிரபரணி வற்றாத ஜீவநதியாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழ் தோன்றியதும் தாமிரபரணி நதியான ‘பொருநனை’ தோன்றியதும் இந்த பொதிகை மலையில்தான் என்பதும் காலம் காலமாக கூறப்பட்டு வருகின்றன. இங்குதான் அகத்திய மாமுனி தமிழ் இலக்கியத்தை தனது சீடர்களுக்கு கற்றுக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் சிறப்புமிக்க விஷயம் என்னவென்றால், பொருநனை நதி உருவாகி, வற்றாத ஜீவ நதியாக ஓடி தரைதளத்திற்கு வரும் இடம்தான் ’உலக நாகரிகத்தின் தொட்டில்’ என புகழப்படும் ஆதிச்சநல்லூர். 2004ஆம் ஆண்டில் நடைபெற்ற அகழாய்வுகளில் கிடைத்த பொருட்களை புளோரிடாவில் உள்ள ஆய்வகதிற்கு அனுப்பி ஆய்வு செய்ததில் பொருநை நதிக்கரையான ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 2,900 வருடங்களுக்கு முந்தையது என கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது கிடைத்திருக்கும் ஆய்வு முடிவுகளின் படி பொருநை நதிக்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்திருக்கிறது.
தமிழர்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் நாகரிகத்தைம் பொறுத்துக்கொள்ளமுடியாமல் அவற்றை சிதைக்கும் நோக்கில் சில ஆதிக்க சக்திகள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற அகழாய்வுகளும் அறிவியல்பூர்வமான ஆய்வு முடிவுகளும் அவர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் என்பது உறுதி