பெற்றோர் தரப்பில் பெரும் ஆதரவு : தமிழ்நாடு அரசு +2 தேர்வை நடத்த வாய்ப்பு
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த பெரும்பாலானா பெற்றோர்களும், கல்வியாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் விரைவில் தமிழ்நாடு அரசு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் என கல்வி நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி முதல் முறையாக இயங்கவில்லை. வழக்கமாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் புதிய கல்வி ஆண்டு தொடங்கும் நிலையில், நடப்பாண்டில் கொரோனா காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு தேர்வு நடத்தப்படவில்லை.
வழக்கமாக மார்ச் மாதத்திலே நடத்தி முடிக்கப்படும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா காரணமாக இதுவரை நடத்தப்படவில்லை. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாததால், மாணவர்களின் உயர்கல்வி குறித்து கேள்வி எழுந்துள்ளது. 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை நடத்துவதில் மாநில அரசு உறுதியாக உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. இதையடுத்து தமிழகத்திலும் 12-ஆம் வகுப்பு தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், தற்போது 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா? அல்லது ரத்து செய்யலாமா? என்பது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் இணைய வழியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்களும், 80 % கல்வியாளர்களும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நிச்சயம் நடத்தவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
அதேபோல், மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை போன்ற அமைப்புகளும் பொதுத்தேர்வை நிச்சயம் நடத்துவதுதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது என கூறியுள்ளனர். அவ்வாறு தேர்வு நடத்தும்போது, மாணவர்கள் இருக்கும் பகுதிக்கு அருகிலே தேர்வு எழுத வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும். ஆசிரியர்களுக்கும் அவர்கள் இருக்கும் பகுதியிலேயே தேர்வு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். அதோடு, தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள வலுவான பள்ளிக் கல்வி கட்டமைப்பை சரியாக பயன்படுத்தி பாதுகாப்பாக தேர்வை நடத்த இயலும் என்றும் கல்வியாளர்கள் தரப்பு அரசுக்கு பரிந்துரைத்தனர். இதன் அடிப்படையில் பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தப்பட உள்ளது,
தமிழகத்தில் பெரும்பாலான பெற்றோர்களும், கல்வியாளர்களும் பொதுத்தேர்வை நடத்த ஆதரவு தெரிவித்துள்ளதால், ஊரடங்கு குறித்து அறிவிப்பு வெளியான பிறகு விரைவில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க : மேட்டூர் அனல் மின் நிலையத்தின் நிலக்கரி பிரிவில் தீ விபத்து