Sterlite Oxygen Update : ஸ்டெர்லைட் ஆலையில் மிக விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி - அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழகத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதால், மிக விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், தமிழகத்தில் சிறியவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில பகுதிகளில் பெற்றோர்கள் இருவருக்குமே கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், அந்த வீட்டில் உள்ள குழந்தைகளின் பராமரிப்பும், பாதுகாப்பும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறது. இதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் தொற்று பரவாத குழந்தைகளின் பராமரிப்பிற்காக குழந்தைகள் பாதுகாப்பு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இந்த பாதுகாப்பு மையம் தமிழகத்திலே முதன் முறையாக திருநெல்வேலியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு நல மையத்தை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கொரோனாவால் பாதிக்கப்படும் பெற்றோர்களின் தொற்று பாதிக்கப்படாத குழந்தைகளை இந்த மையத்தில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தொற்றை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். ஆக்சிஜன் தேவை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். ஸ்டெர்லைட் ஆலையின் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆலை இயங்க தொடங்கியுள்ளது என்றார்.
மேலும், ஆக்சிஜனை திரவமாக்குவதற்கு உரிய வெப்பநிலையை அடைய வேண்டும். இதனால், வெப்பநிலையை உயர்த்த வேண்டிய பணிகள் நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என்றும் கூறினார். பின்னர், ரூர்கேலாவில் இருந்து 5 டிரக்குகளில் தூத்துக்குடிக்கு திரவ ஆக்சிஜன் வருகிறது. அங்கிருந்து அருகில் உள்ள மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப ஆக்சிஜன் அனுப்பப்படும் என்றும் கூறினார்.
புதியதாக தொடங்கப்பட்டுள்ள இந்த குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் குழந்தைகளை சேர்க்க சைல்டு லைன் 1098, தொலைபேசி எண் 0462 2551953, வாட்ஸ் அப் எண் 9944746791 ஆகிய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளில் பெரும்பாலோனர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே உயிரிழந்து வருகின்றனர். இதனால், அதன் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, கடந்த ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்ட அனுமதியைத் தொடர்ந்து, அந்த ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனைப் பெறுவதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், திருச்சியில் உள்ள பெல் நிறுவனம், தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் மூலமாகவும் ஆக்சிஜன் தயாரிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர, தமிழகத்தில் மூன்று நாட்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை சரி செய்யப்படும் என்று அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜனும், தங்கம் தென்னரசும் ஏற்கனவே கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.