Accident: தலைகுப்புற கவிழ்ந்த காய்கறி வண்டி; சாத்தான் குளத்தில் பரபரப்பு; டிரைவருக்கு என்ன ஆச்சு?
சாலையின் நடுவில் தலைகீழாக கவிழ்ந்து கிடந்த லோடு வாகனத்தினால் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாத்தான்குளம் அருகே காய்கறி லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தட்டார்மடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புளியடி மாரியம்மன் கோவில் தெருவில் காய்கறி மொத்த வியாபாரம் செய்து வருபவர் மகேந்திரன். புளியடி மாரியம்மன் வெளியூரில் இருந்து குடோனில் காய்கறிகளை மொத்தமாக இறக்கி அங்கிருந்து சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒவ்வொரு கடைகளுக்கும் தினந்தோறும் காய்கறிகளை கொண்டு கொண்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் வழக்கம் போல திசையன்விளை பகுதிக்கு காய்கறிகளை இறக்கிவிட்டு மீதமுள்ள காய்கறிகளுடன் சாத்தான்குளம் நோக்கி அவரது சரக்கு வாகனம் வந்துள்ளது. வாகனத்தை திசையன்விளையைசேர்ந்த மோகன்ராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.
லோடு வாகனம் அடப்புவிளை கிராமத்திற்கும் சிறப்பூர் கிராமத்திற்கும் நடுவில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்த ஓட்டுநரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திசையன்விளை அருகில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலையின் நடுவில் தலைகீழாக கவிழ்ந்து கிடந்த லோடு வாகனத்தினால் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்



















