OPS Statement: "விஷம் போல் ஏறும் விலைவாசி; கட்டுப்படுத்தாத திமுக அரசு” - ஓபிஎஸ் கண்டனம்!
விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தாத திமுக அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தாத திமுக அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”2021 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபோது ஒரு கிலோ அரிசி 55 ரூபாய் என்ற அளவில் வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. அதே அரிசி தற்போது 70 ரூபாயாக உயர்ந்து இருக்கிறது. இதேபோன்று, சராசரியாக 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு தற்போது 180 ரூபாய் வரையிலும், 105 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்ட ஒரு கிலோ உளுத்தம் பருப்பு 160 ரூபாய் வரையிலும், 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பாசி பருப்பு 150 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது. விலையைக் கேட்டாலே விரக்தி ஏற்படும் வகையில், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன. ஒரு லிட்டர் நல்லெண்ணெய் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையல் எண்ணெய் விலையும் 50 விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்துள்ளது.
இந்த விலைவாசி உயர்வினை அரசே ஏற்றுக்கொள்ளும் விதமாக, சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள 54 அமுதம் அங்காடிகள் மூலமாக பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றை விற்பனை செய்வதாக அரசே அறிவித்துள்ளது. உணவுத் துறை சார்பில் அரை கிலோ துவரம் பருப்பு 75 ரூபாய்க்கு இன்று முதல் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை மேலும் குறைக்கப்பட வேண்டும். இந்த விற்பனை என்பது "யானை பசிக்கு சோளப்பொறி போடுவது" என்பதற்கேற்ப உள்ளது.
தமிழ்நாட்டினுடைய ஒட்டுமொத்த மக்கள் தொகையைக் கணக்கிடும்போது இதன்மூலம் பயனடைபவர்கள் மிகக் குறைவு. விலைவாசி உயர்விற்கு மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், சர்வதேச சந்தை நிலவரம், உள்நாட்டு விளைச்சல் போன்றவை காரணமாக இருந்தாலும், முக்கியமான காரணமாக கருதப்படுவது பதுக்கல். உதாரணத்திற்கு ஏப்ரல் மாதத்தில் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது கிலோ 150 ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்றால், விளைந்த தக்காளியை பதுக்கி வைத்து, கொள்ளை இலாபம் சம்பாதிப்போர் மீது நடவடிக்கை எடுக்காததும், அதைப் பாதுகாத்து வைக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாததும்தான் காரணம். இந்தக் கடமையைச் செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. இந்தக் கடமையைச் செய்திருந்தால், ஓரளவுக்கு விலைவாசி கட்டுக்குள் இருந்திருக்கும். தி.மு.க. அரசின் தற்போதைய நடவடிக்கை என்பது தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்கு சமம். இதனால் பாதிக்கப்படுபவர்கள் ஏழை, எளிய மக்கள்தான். இது கடும் கண்டனத்திற்குரியது.
இனி வருங்காலங்களில், மக்கள் வாங்கும் திறனுக்கு ஏற்ப பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்யவும், உற்பத்தி செய்த பொருட்களை பாதுகாத்து வைப்பதற்கான வசதிகளை மேற்கொள்ளவும், விளைந்த பொருட்களை இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாக்கவும், பதுக்கி வைத்து பற்றாக்குறை ஏற்படுத்துவோரைக் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து விலைவாசி உயர்வினை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்று தி.மு.க. அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.