நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
முழுமையாக சேதமடைந்த அரசுப்பேருந்தின் மேல்பாகம்: மீட்புப்பணிகள் தீவிரம்

நீலகிரி மாவட்டம் உதகையில் அருகே பர்லியாரில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சிக்கி அவ்வழியாக கோவை நோக்கி சென்ற அரசுப்பேருந்து சேதமடைந்தது. மண் மற்றும் ராட்சத பாறைகளின் தாக்கத்தால் பேருந்தின் மேல்பாகம் முழுமையாக
பாதிக்கப்பட்ட நிலையில் ஓட்டுநர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உள்ளிருந்த பயணிகள் நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.
ஓட்டுநரின் சடலம் கண்டெடுப்பு: பயணிகள் நிலை என்ன?
நிலச்சரிவின் காரணமாக ஆங்காங்கே சாலை மூடப்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதையில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள நிலையில் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்தின் மீது விழுந்து கிடக்கும் மரங்கள் மற்றும் மண்ணை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்ற நிலையில், விபத்தில் வேறு வாகனங்கள் ஏதும் சிக்கி மலையடிவாரத்தில் விழுந்துள்ளனவா எனவும் மீட்புப்படையினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுநரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பேருந்துப்பயணிகளின் நிலைமை என்னவென்பது தெரியாததால் அவர்களின் உறவினர்கள் பதற்றமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்
பொதுவாக மழைக்காலங்களில் மலைப்பாதைகள் மற்றும் மலைகளை ஒட்டிய சாலைகளில் மண்சரிவுகள் ஏற்படும் என்பதால் தொலை தூரப்பயணங்கள் மற்றும் சுற்றுலாக்களை தவிர்க்க வேண்டுமெனவும், மேலும் விபத்துக்களை தவிர்க்கும் முன்னெச்சரிக்கையாக மலைச்சாலைகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு ஏற்படுத்த வேண்டுமென்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















