Salem Fire Accident: சேலம் பட்டாசு குடோன் வெடி விபத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்வு.
மேலும் 3 பேர் தீக்காயங்களுடன் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டம் இரும்பாலை அருகே சர்க்கார் கொல்லப்பட்டி செங்கனூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சதிஸ்குமார். இவர் சர்க்கில் வானம் பட்டாசு குடோன் உரிமையாளர். பட்டாசுகளை மொத்தமாக விற்பனை செய்யும் இந்த குடோனில் பத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி நான்கு மணி அளவில் பட்டாசு குடோனில் திடீர் வெடி சத்தத்துடன் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பட்டாசு குடோன் உரிமையாளர் சதீஷ் குமார், நடேசன் பழனிச்சாமி மற்றும் பானுமதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பட்டாசு வெடி விபத்தில் மஜ்ரா கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த மோகனா, எம் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த வசந்தரா, மகேஸ்வரி, மணிமேகலை, பிரபாகரன், பிருந்தா ஆகிய 6 பேர் ஆகியோர் 60 சதவீத தீக்காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
பட்டாசு வெடி விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி, தெற்கு துணை ஆணையாளர் லாவண்யா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் இரும்பாலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பட்டாசு குடோனில் இருந்த 3 பேர் உயிரிழந்து 6 பேர் படுகாயம் அடைந்துள்ளது தெரியவந்தது. மேலும் நேற்று காலை சேலம் அரசு மோகன் குமரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபாகரன் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை பெற்று வந்த மஜ்ரா கொல்லப்பட்டியை சேர்ந்த மோகனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று மகேஸ்வரி என்ற பெண் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து எவ்வாறு நடந்தது எத்தனை பேர் பணி புரிந்தனர் என்பது குறித்து இரும்பாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை படுகாயம் அடைந்து பாதிக்கபட்ட நபர்களிடம் நேரில் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் சர்க்கார் கொல்லப்பட்ட அருகே பட்டாசு குடோன் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. மேலும் 3 பேர் தீக்காயங்களுடன் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் தொடர்புடைய பட்டாசு குடோன் உரிமையாளர்கள் கந்தசாமி மற்றும் அவரது சகோதரர் வீரமணி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சேலம் பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி, சேலம் பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தல 3 லட்சம் ரூபாயும், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50,000 ரூபாயும் முதல்வர் பொது நிதியிலிருந்து வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.