CM Stalin Meet Andhra Pradesh Student: அதுக்காகத்தான் போராடுறோம்.. நம்பிக்கையோடு போயிட்டு வாங்க.. காரை நிறுத்தி ஆந்திரா மாணவனுக்கு நம்பிக்கை கொடுத்த முதல்வர்..!
நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகையுடன் நின்று கொண்டிருந்த மாணவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை கொடுத்து அனுப்பி வைத்தார்.
![CM Stalin Meet Andhra Pradesh Student: அதுக்காகத்தான் போராடுறோம்.. நம்பிக்கையோடு போயிட்டு வாங்க.. காரை நிறுத்தி ஆந்திரா மாணவனுக்கு நம்பிக்கை கொடுத்த முதல்வர்..! On way to Assembly Tamilnadu CM Stalin stops to meet student with placard reading CM Sir Help Me CM Stalin Meet Andhra Pradesh Student: அதுக்காகத்தான் போராடுறோம்.. நம்பிக்கையோடு போயிட்டு வாங்க.. காரை நிறுத்தி ஆந்திரா மாணவனுக்கு நம்பிக்கை கொடுத்த முதல்வர்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/04/564e63407216ca838127dc889b4b5178_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழக மாணவர்களின் கல்வி வளர்ச்சியை தடை செய்யும் வகையில், நீட் தேர்வு இருப்பதாக தமிழக அரசு தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. ஆட்சிக்கு வரும் முன்னரே, நீட் தேர்வு எதிர்ப்பை முன்வைத்து பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின் ஜூன் 17 ஆம் தேதி பிரதமரை சந்தித்து நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இது மட்டுமன்றி, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா செப்டம்பர் 13 சட்ட மன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஜனாபதி ஒப்புதலை பெறுவதற்காக, முதலில் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த மனு கிடப்பிலேயே இருந்த நிலையில், நேற்று அந்த மனுவை தமிழக அரசுக்கே ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
பதாகையுடன் நின்ற மாணவன்
இந்த நிலையில், தலைமைச் செயலம் வரும் டி.டி.கே. சாலையில், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த என்.சதீஷ் என்பவர், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு நன்றி தெரிவித்து ‘முதல்-அமைச்சர் உதவுங்கள்’ என்ற பதாகையுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் காரை நிறுத்தி அவரிடம் பேசினார்.
நம்பிக்கை கொடுத்த முதல்வர்
அப்போது முதல்வரிடம் பேசிய சதீஷ், “ ஆந்திர மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற போதும், நீட் தேர்வு காரணமாக மருத்துவப் பட்டப்படிப்பு படிக்க முடியாமல் போனது என்றும் ஆகையால் உங்கள் போராட்டம் ஆந்திர மாநிலத்திற்காகவும் இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து பேசிய முதல்வர், “ நீட் தேர்வு ரத்து தொடர்பான சட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அகில இந்திய அளவில் குரல் கொடுத்து வருகிறேன். ஆகையால் நம்பிக்கையோடு ஊருக்கு செல்லுங்கள் என்றார். இதனையடுத்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த சதீஷ் அங்கிருந்து புறப்பட்டார்.
தமிழ்நாட்டை பாஜக -வால் ஆளமுடியாது
முன்னதாக, 2022ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் நிகழ்வு குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் உரையில் நமது நாடு இப்போது எதிர்கொள்ளும் முக்கிய சவால்களைப் பற்றி பேசவில்லை என்று ராகுல் காந்தி கூறினார்.
தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி “தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழக மக்களை பாஜக ஆள முடியாது. நாட்டின் அடிதளத்தோடு ஆர்.எஸ்.எஸ் விளையாடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு மொழி, கலாசாரம், வரலாறு குறித்த புரிதல் இருக்கிறது. அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன். நீட் தேர்வில் தமிழகம் தொடர்ந்து விலக்கு கோருகிறது. ஆனால் மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் தொடர்ந்து மனம் தளராமல் தமிழகம் கேட்டுக்கொண்டுக்கிறது” எனப்பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)