Omni Bus Fares Hiked: தொடர் விடுமுறை; வசூல் வேட்டையை தொடங்கிய ஆம்னி பேருந்துகள் - அரசின் நடவடிக்கை பாயுமா.?
பண்டிகை, தொடர் விடுமுறையெல்லாம் வந்துவிட்டால், மக்களுக்கு கொண்டாட்டமோ இல்லையோ, ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம் தான். வழக்கம் போல் வசூல் வேட்டையை தொடங்கிவிட்டனர். அரசு நடவடிக்கை எடுக்குமா?

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறை வந்துவிட்டதால், சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், ஆம்னி பேருந்துகள் கட்டண வேட்டையை தொடங்கிவிட்டன. ஊருக்கு செல்ல டிக்கெட் புக் செய்யலாம் என செயலியை திறந்த மக்களுக்கு பேரதிர்ச்சி ஏற்படும் அளவிற்கு, பல மடங்கு கட்டணங்களை உயர்த்தி, ஊருக்கு செல்ல வேண்டுமா என்ற அளவிற்கு யோசிக்க வைத்துள்ளார்கள். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
தொடர் விடுமுறை
இந்த ஆண்டு, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி, வெள்ளிக்கிழமையில் வருகிறது. அதேபோல், கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை 16-ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து, வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை வருவதால், 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.
இதையடுத்து, கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையிலிருந்து, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, தேனி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், வியாழக் கிழமையன்றே சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
மக்கள் ஆம்னி பேருந்தில் செல்ல வேண்டிய கட்டாயம்
தொடர் விடுமுறை காரணமாக, தமிழ்நாடு அரசு மற்றும் ரயில்வே துறை சார்பாக, சிறப்புப் பேருந்துகள், சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அதிக அளவில் மக்கள் புக்கிங் செய்ததால், முன்பதிவுகள் விற்றுத் தீர்ந்தன.
இதைத் தொடர்ந்து, வேறு வழியில்லாமல், தனியார் ஆம்னி பேருந்துகளில் செல்ல வேண்டிய கட்டாயம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்காக முன்பதிவு செய்வதற்காக முயன்றவர்களுக்குத் தான் அதிர்ச்சி காத்திருந்தது.
கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள்
ஊருக்கு செல்ல வழியில்லாமல் தவிக்கும் மக்களின் தேவையை பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளையை தொடங்கிவிட்டன. சாதாரணமாக, சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல 600 முதல் 800 ருபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் தற்போது, 4000 ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்தப்படுகிறது.

இதேபோல், திருச்சி, கோவை போன்ற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில், டிக்கெட் கட்டணம் 2000 ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்படுவதால், மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து, சேலம், நெல்லை, திருச்சி வழித்தடங்களுக்கு 3000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.


அரசு நடவடிக்கை எடுக்குமா.?
இதனிடையே, சென்னை கோயம்பேட்டிலிருந்து செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் நடத்தப்படும் இந்த கட்டணக் கொள்ளையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு நடவடிக்கை எடுக்குமா.?





















