அளவு 90க்கு குறைந்தால் ஆக்சிஜன் ‛பெட்’ -புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
90க்கும் கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ள கொரோனா நோயாளிகளை ஆக்சிஜன் படுக்கைகளில் அனுமதிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கொரோனா நோயாளிகளை மூன்று வகையாக பிரித்து சிகிச்சை அளிக்க வேண்டும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94க்கும் அதிகமாக இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்க கூடாது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஆக்சிஜன் அளவு 94க்கும் அதிகமாக இருந்தால் வீட்டு தனிமையில் அனுமதிக்க வேண்டும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94 முதல் 90க்குள் இருந்தால், கொரோனா சிகிச்சை மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கலாம். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90க்கும் கீழே குறைந்திருந்தால் மட்டுமே அரசு மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கலாம். 90க்கும் கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ள கொரோனா நோயாளிகளை ஆக்சிஜன் படுக்கைகளில் அனுமதிக்க வேண்டும். சுய தனிமையில் இருப்பவர்கள் உள்பட அனைத்து பிரிவு கொரோனா தொற்றாளர்களும் குப்புற படுப்பதை வழக்கமாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 936 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 596 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 31 ஆயிரத்து 223 நபர்கள் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 39 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 478 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அடுத்தடுத்து ஆறுதல்; குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு!
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன.
மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.